ஈரானை கவனமாக இருக்கும்படி டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை

சர்வதேச அணுசக்தி உடன்படிக்கையில் நிர்ணயிக்கப்பட்ட எல்லைக்கு அப்பால் செறிவூட்டப்பட்ட யுரேனிய இருப்பை அதிகரிக்கும் அறிப்பை ஈரான் வெளியிட்டதை அடுத்து, அந்நாடு “கவனமாக இருப்பது நல்லது” என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

ஈரானுடனான 2015 அணுசக்தி உடன்படிக்கையில் இருந்து கடந்த ஆண்டு தன்னிச்சையாக வெளியேறிய டிரம்ப் ஈரான் மீது மீண்டும் பொருளாதார தடைகளை கொண்டுவந்தார்.

இந்நிலையில் உடன்படிக்கையில் நிர்ணயிக்கப்பட்ட 3.67 வீத செறிவூட்டப்பட்ட யுரேனிய கையிறுப்பு அளவை கடப்பது குறித்து ஈரான் கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. ஒப்பந்தத்தை கடைப்பிடிக்காவிட்டால் தனது கடப்பாட்டை 60 தினங்களுக்கு ஒருமுறை குறைப்பதாகவும் ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் இந்த உடன்படிக்கையில் தொடர்ந்தும் நீடிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஈரானின் புதிய நகர்வு குறித்து டிரம்பிடம் கேட்கப்பட்டபோது, “ஒரு காரணத்தில் நீங்கள் வளமாக இருப்பதால் ஈரான் கவனமாக இருப்பது நல்லது. அந்தக் காரணம் என்ன என்பதை நான் கூறப்போவதில்லை ஆனால் அது நல்லதல்ல” என்று குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்போகிறது என்பது பற்றி டிரம்ப் இதன்போது விளக்கவில்லை. எனினும் ஈரான் ஒருபோதும் அணு ஆயுதத்தை பெறாது என்று செய்தியாளர்களிடம் அவர் குறிப்பிட்டார்.

எனினும் ஈரான் அணு ஆயுதம் உற்பத்தி செய்ய முயற்சிப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை அது தொடர்ந்து மறுத்து வருகிறது.

இதனிடையே அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ ட்விட்டரில் கூறியதாவது, “ஈரானின் அணுசக்தி திட்டத்தின் சமீபத்திய விரிவாக்கம் அந்த நாட்டை தனிமைப்படுத்தப்படுவதற்கும் பொருளாதாரத் தடைகளுக்கும் வழிவகுக்கும். மேலும், ஈரானின் அரசு அணு ஆயுதங்களை ஏந்தியிருப்பது உலகிற்கு ஆபத்தை விளைவிக்கும்” என்றார்.

Tue, 07/09/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை