கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதில் எல்லைகளே முக்கிய பிரச்சினை

முஸ்லிம்களுக்கு எதிரான அநீதிகளுக்கு தீர்வு வழங்காமல், கல்முனை வடக்கு தமிழ் உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவது,கல்முனையில் பெரும்பான்மையாக வாழும் முஸ்லிம்களுக்கு பாரிய இழப்பை ஏற்படுத்துவதுடன், அவர்களின் பொருளாதாரத்தையும் கேள்விக் குறியாக்குமென திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் தெரிவித்தார்.

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவது தொடர்பாக, விளக்கமளிக்கும் கூட்டம் சம்மாந்துறை பத்ர் ஜும்ஆப் பள்ளிவாசலில் சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபைத் தலைவர் கே.எம்.முஸ்தபா தலைமையில் இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய அவர்: - இந்நடவடிக்கையானது இலங்கை முஸ்லிம் சமூகத்தின் அரசியல், பொருளாதாரத்தை பலமிழக்கச் செய்து முஸ்லிம்களின் தேசியத்தை சிதைப்பதற்கு வழிவகுக்கும்.

தென்கிழக்கின் முகவெற்றிலை கல்முனையாகும். முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட வர்த்தக பூமியாகவும் இது திகழ்கிகறது. இதனை விட்டுக்கொடுக்க முடியாது. இவ்விவகாரத்தை முஸ்லிம்களின் தேசியப் பிரச்சினைகளுள் ஒன்றாகக் கொண்டு சென்று நியாயமாகத் தீர்வைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

இப் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதற்கு ஒருபோதும் முஸ்லிம்கள் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. எனினும், இந்த உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதற்காக தமிழ் மக்களால் முன்வைக்கப்பட்டுள்ள எல்லையே இங்கு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கல்முனையில் வாழும் 63 வீதமான முஸ்லிம்களின் கிராமங்கள், வர்த்தக நிலையங்கள், பஸார், பஸ்நிலையம், அரச நிறுவனங்கள், கடற்கரைப் பள்ளிவாசல், கல்முனை பிரதேச செயலகம், கல்முனை மாநகர சபை, காணிகள், பெறுமதியான சொத்துக்கள் பலவந்தமாக இந்தப்பிரிவிற்குள் உள்ளடக்கப் பட்டுள்ளது. இதனை எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாது.

இந்தவிவகாரத்தை பௌத்த தேரர்கள் கையிலெடுத்து ஒரு மாத காலம் அவகாசம் வழங்கியுள்ளனர்.

இந் நிலையில் முஸ்லிம்களின் முன்மொழிவை ஒரு பிரகடமான வெளியிட்டு, நியாயமான தீர்வை பெற்றுக் கொள்வதற்கான நகர்வுகளை மேற்கொள்ள வேண்டும். இதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

எனவே, கல்முனை முஸ்லிம்களின் இந்த சாத்வீகப் போராட்டத்திற்கு அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்களும், நாட்டில் வாழும் ஏனைய முஸ்லிம்களும் ஆதரவு வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

சம்மாந்துறை கிழக்கு தினகரன் நிருபர்

 

 

Mon, 07/01/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை