வெலிக்கடை படுகொலைக்கு நீதி விசாரணை வேண்டும்

உயிர் தப்பிய நானே நேரடி சாட்சி

தமிழ் மக்களுக்கு எதிராக 83ல் நடத்தப்பட்ட இனக்கலவரத்தின் போது வெலிக்கடை சிறைச்சாலையில் நடந்த படுகொலைக்கும் நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். அன்று இடம்பெற்ற அச்சம்பவத்திற்கு சாட்சியாகவும் அதற்கு சாட்சி சொல்லவும் தமிழ் தேசிய இனத்தின்

சார்பாக நான் தயாராகவே இருக்கிறேன் என பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

பாராளுமன்றில் நேற்று இடம்பெற்ற கம்பனிகள் திருத்தச் சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூலம் தொடர்பிலான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் உரையாற்றுகையில்,

1983இல் நடந்த இரத்த யூலையின் வடுக்களில் ஒன்றான வெலிக்கடைப் படுகொலை நாட்களை நான் நினைத்துப் பார்க்கிறேன். விழிகளில் நீரையும் நெஞ்சில் நெருப்பையும் விதைத்துச்சென்ற அந்த இரத்தம் தோய்ந்த நாட்களை எண்ணிப்பார்க்கிறேன்.

1983இல் நடந்த இரத்த யூலைப் படுகொலையின் போது தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்காகப் போராடியவன் என்ற குற்றச்சாட்டில். நான் கைது செய்யப்பட்டு வெலிக்கடைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தேன்.

வீதிகளில் மட்டுமன்றி வீடுகள் புகுந்தும் நடத்திய கொலை வெறியாட்டத்தில் நாம் சிறைப்பட்டிருந்த வெலிக்கடைச் சிறையும் தப்பவில்லை. எமது வீரமிகு போராளிகளையும் தலைவர்களையும் வெலிக்கடையில் வேட்டையாடிய கோரங்களை நேரில் பார்த்த கண் கண்ட சாட்சிகளில் ஒருவனாக இன்று நானும் இருக்கின்றேன்.

நான் மட்டுமன்றி என்னுடன் கூடவே நின்று வீரமுடன் வெலிக்கடையில் களமாடி இன்று என்னுடன் கூடவே பயணித்து வரும் தோழர் பனாகொடை மகேஸ்வரனும் அதற்குச் சாட்சியாக இருக்கின்றார்.

எம் தேச விடுதலைப் போராளிகளில் 53 பேர் அதில் கொல்லப்பட்டிருந்தார்கள்.

எம்மைக் கொல்ல வந்த காடையர்களை எதிர்த்து நானும் என்னுடன் கூட இருந்தவர்களும் அன்று மூர்க்கத்தனமாகப் போராடியிருக்காவிட்டால் இன்னும் பலர் அச் சிறையில் கொல்லப்பட்டிருப்பார்கள்.

நானும் அன்று கொல்லப்பட்டிருந்தால். இன்று நாதியற்ற எமது மக்களுக்கு நீதி கேட்டு யதார்த்த வழிமுறையில் உழைப்பதற்கான வாய்ப்பை நான் இழந்திருப்பேன்.

தர்மம் தலைகாக்கும் என்பது எம் முன்னோர்களின் முது மொழி. என்னவோ தெரியாது வெலிக்கடை படுகொலையில் இருந்து அடுத்தடுத்து என்னைத் தேடிவந்த மரணங்களை வென்று இன்னமும் எனது மக்களுக்காக நான் உழைத்துக்கொண்டே இருக்கின்றேன்.

வெலிக்கடைப் படுகொலை எமது விடுதலை வேள்வியை நெய் ஊற்றி வளர வைத்தது. அன்று நாம் போராடப் புறப்பட்டதன் நியாயங்களை உலகத்தின் விழிகளில் நீதியென நிமிர வைத்தது.

எங்கெல்லாம் எவரால் படுகொலைகள் நடத்தப்பட்டனவோ அதற்கெல்லாம் பாரபட்சமற்ற நீதி விசாரணைகள் நடத்தப்படவேண்டும். உண்மைகள் கண்டறியப்பட வேண்டும்.

Thu, 07/25/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை