பிரபாகரனின் ஆதிக்கத்தின்போது தேரர்களின் உதவியை நாடவில்லை

ஹரீஸ் எம்.பி

பிரபாகரனின் ஆதிக்கத்தின்போது தேரர்களின் உதவியை நாடி நாங்கள் தமிழ் மக்களை பழிவாங்கவில்லை. அப்போதைய காலகட்டத்தில் மறைந்த முன்னாள் அமைச்சர் எம்.எச்.எம். அஷ்ரப் பலம்கொண்டவராக இருந்த காலத்திலும் நாங்கள் தமிழர்களை தட்டிக்கழிக்கவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

வசதியற்ற குடும்பங்களுக்கு இலவச மின்சார இணைப்பு வழங்கும் நிகழ்வு நேற்றுமுன்தினம் (29) மஃமூத் மகளிர் கல்லூரி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கம்ப​ெரலிய திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சாய்ந்தமருது, கல்முனை பிரதேசத்தை சேர்ந்த 225 வசதி குறைந்த பொதுமக்களுக்கான மின்சார இணைப்பை பெறுவதற்கான ஆவணங்கள் மக்களிடம் வழங்கப்பட்டது.

இங்கு மேலும் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர்,

உங்களின் துஆ மூலமே இன்று நாம் நிம்மதியாக இருக்கிறோம். சிரேஷ்ட அரசியல்வாதிகள் இருந்தும் மக்களின் ஒற்றுமைக்கு தமிழ் தலைமைகள் வழிசமைக்கவில்லை. எம்.எஸ். காரியப்பர் செய்த பிரிப்பின் காரணமாக நான்காக இருந்த சபையை 1987 ஆம் ஆண்டு ஏ.ஆர்.எம். மன்சூர் இணைத்தார். பின்னர் பல சம்பவங்கள் நடந்து முடிந்திருக்கிறது. இந்த சபையை முன்னர் இருந்தது போன்று நான்காக பிரிப்போம் என்பதே எமது மக்களுக்கு தேவையானது.

தமிழ் மக்களுக்கு பல நகரங்கள் இருந்தாலும் முஸ்லிங்களுக்கு உள்ள ஒரே நகரம் கல்முனை மட்டுமே. இந்த நகரில் நாங்கள் பெரும்பான்மையாக வாழ்வதால் இதனை தக்கவைக்க பல வருடங்களாக சிரமத்துடன் போராடுகிறேன் என தெரிவித்தார்.

கல்முனை மத்திய தினகரன் நிருபர்

Mon, 07/01/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை