அரசாங்கம் நீர் பாவனை கட்டணத்தை அதிகரிக்க ஒருபோதும் விரும்பவில்லை

மாத்தறை -- ஹம்பாந்தோட்டை பிரதேசங்களுக்கு சுத்தமான குடிநீரை பெற்றுக் கொடுக்க துரித நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் நீர்ப்பாவனைக் கட்டணத்தை அதிகரிக்க எமது அரசாங்கம் விரும்பவில்லை. இருந்தாலும் மக்களுக்கு நீர் விநியோகத்தை வழமை போன்று வழங்குவதற்கு நாம் வழிவகுத்துள்ளோம் என நகர அபிவிருத்தி நீர் வடிகாலமைப்பு மற்றும் உயர் கல்வி அமைச்சர் லகி ஜயவர்தன தெரிவித்தார்.

மாத்தறை, மாலிம்பட நீர் சுத்திகரிப்பு பணிக்கான அடிக்கல் நாட்டு வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் அங்கு உரையாற்றுகையில், 12 பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட 372 கிராம சேவகர் பிரிவுகளிலுள்ள மூன்று இலட்சம் குடும்பங்கள் சுத்தமான குடிநீரைப் பெற்றுக் கொள்ளவுள்ளனர். நிரந்தர அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு 2030ம் ஆண்டு ஆகும் போது சகலருக்கும் சுத்தமான குடிநீரை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் இத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இதற்காக அரசாங்கம் 4208 மில்லியன் ரூபா முதலீடு செய்துள்ளது.

இப் பிரதேசத்தில் நாளொன்றுக்கு 6000 கனமீட்டர் சுத்தமான குடிநீர் வழங்க முடிந்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் மாலிம்பட, கல்கெடிய, யடியன, தன்தெனிய, மிரிஸ்வத்த போன்ற பிரதேசங்களில் தரை கீழ் நீர்த் தாங்கிகள் நிறுவ எதிர்பார்த்துள்ளோம்.

பழைய நீர் வழங்கும் கட்டமைப்பை புனரமைத்து அதன் மூலமும் நீர் வழங்கவுள்ளோம். மேலும் குடிநீரில் உவர் நீர் கலப்பதையும் தடுக்கவும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இவ் வேலைத் திட்டங்களுக்கு ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்களான மங்கள சமரவீர, புத்திக பதிரன, முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் பூரண ஒத்துழைப்பு வழங்கியமையை நினைவூட்ட விரும்புகிறேன்.

கடந்த அரசாங்கம் பெற்ற கடன்களை நாம் மிக சிரமப்பட்டு வழங்கி வருகிறோம். தொடர்ந்து அவ் அரசாங்கம் இருந்திருப்பின் நாம் மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும் என்றார்.

இவ் வைபவத்தில் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் நீர் வடிகால் சபை அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

வெலிகம தினகரன் நிருபர்

 

Thu, 07/04/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை