கினிகத்தேனையில் நிலம் தாழிறக்கம்

மலையகத்தில் தொடரும் மழை, மண்சரிவு

4 பேர் பலி

10 கடைகள் நிர்மூலம்
165 குடும்பங்கள் நிர்க்கதி
நுவரெலியா கடும் பாதிப்பு மீட்புப் பணிகளில் இராணுவம்

 

மலையகத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையின் காரணமாகநுவரெலியா மாவட்டம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.கடும் மழை,சூறைக் காற்றின் காரணமாக இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ளம், மண் சரிவு, மரங்கள் முறிவு அனர்த்தங்கள் காரணமாக 165 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

கினிகத்தேனை நகரில் மண்சரிவு ஏற்பட்டதில் பத்துக் கடைகள் தாழிறங்கி முற்றாக இடிந்து வீழ்ந்துள்ளதுடன் ஒருவர் காணாமற்போனார். அவரைத் தேடும் பணி முன்னெடுக்கப்பட்டபோது அவர் சடலமாக மீட்கப்பட்டார்.

நுவரெலியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் 83 குடும்பங்களைச் சேர்ந்த 399 பேர் வெள்ளத்தினாலும், 2 குடும்பங்களைச் சேர்ந்த 7 பேர் மண்சரிவினாலும் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அம்பகமுவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் 73 குடும்பங்களைச் சேர்ந்த 292 வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்தில் 77 வீடுகள் பகுதி அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. அங்கு 2 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அம்பகமுவ போடைஸ் தமிழ் வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள இடைத்தங்கல் முகாமில் 44 குடும்பங்களைச் சேர்ந்த 169 பேரும், பன்மூர் ஆரம்ப பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் 13 குடும்பங்களின் 60 பேரும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்தில் பெய்து வரும் அடை மழை காரணமாக இங்கு அதிகரித்துள்ள  குளிர்நிலை மற்றும் சீரற்ற தன்மை காரணமாக இயல்பு நிலை முற்றாகப் பாதித்துள்ளது.

மரக்கறி பயிர்ச்செய்கை முற்றாக பாதித்துள்ள அதேவேளை நாட்கூலித் தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மண்சரிவு அபாயங்கள், போக்குவரத்து தடைகள், வெள்ளப்பெருக்கு ஆகியவற்றுடன் அணைக்கட்டுக்கள் திறந்து விடும் தேவையும் ஏற்பட்டுள்ளது. சீரற்ற காலநிலை நீடித்துக் கொண்டிருப்பதால், பொது மக்கள் அவதானமாக செயற்படுமாறும் எந்த நேரத்திலும் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் கோரப்பட்டுள்ளது.

பெய்து வரும் மழையினால் பதுளை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களின் பல பகுதிகளில் ஆங்காங்கே ஏற்பட்டுள்ள மண்சரிவு காரணமாக பிரதான வீதிப் போக்குவரத்துக்கள் பாதிப்படைந்துள்ளன.

மேலும் அடை மழையினால் கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கினிகத்தேனை நகரில் இடம்பெற்ற சரிவு காரணமாக 10 கடைத் தொகுதிகள் முற்றாக சரிந்து அனர்த்தத்திற்குள்ளாகின.

இந்த நிலையில், அக்கடைகளில் ஏற்பட்ட சரிவில் சிக்குண்ட நிலையில் காணாமல் போயிருந்த ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடையொன்றில் தங்கியிருந்த ஒருவரே காணாமல் போய் சடலமாக மீட்கப்பட்டவராவார்.

நேற்றுக்காலை முதல் தேடுதல் நடவடிக்கையில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர், பொது மக்கள் தேடுதல் பணிகளில் ஈடுப்பட்டிருந்தனர்.இந்த நிலையில், சரிவில் சிக்குண்டு இருந்த கினிகத்தேனை பகுதியைச் சேர்ந்த கே.எம். ஜமால்டீன் வயது 60 என்ற நபர் சடலமாக காலை 9 மணியளவில் மீட்கப்பட்டுள்ளார்.

அக்கர்ப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டொரிங்டன் தோட்டத்தில் 18.07.2019 மாலை டொரிங்டன் தமிழ் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 12 வயதுடைய இரண்டு மாணவிகளான சகோதரிகள் பாடசாலை விட்டு வீடு திரும்புகையில் நீரோடை ஒன்றில் வீழ்ந்து அடித்துச் செல்லப்பட்ட நிலையில், சடலமாக மீட்கப்பட்டனர்.

இதேவேளை ஹற்றன் பன்மூர் தோட்டத்தில் பெய்த கடும் மழை காரணமாக அப்பகுதியில் வசித்து வந்த 13 குடும்பங்களைச் சேர்ந்த 60 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்போது பாதிக்கப்பட்டவர்கள் சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன், இவர்களுக்கு அம்பகமுவ பிரதேச செயலகத்தின் இடர் முகாமைத்துவ நிலையத்தினால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தொடரும் மழை காரணமாக இப்பகுதியில் பாரிய அனர்த்தம் ஏற்படலாம் என்ற அச்சம் காரணமாக இராணுவத்தினர் குறித்த பகுதியில் கடமையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை கண்டியில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததில் சைக்கிளில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கண்டி மஹியங்கனை பிரதான வீதியில் நேற்று முன்தினம் இரவு இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் ஒருத்தொட்ட பகுதியிலிருந்து மஹியங்கனைக்குப் பயணித்துக்கொண்டிருந்த போது மரம் ஒன்று முறிந்து அவரின் மீது வீழ்ந்துள்ளது. இதனையடுத்து காயமடைந்த அவர் தெல்தெனிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

மலையகத்தில் மூன்று நாட்களாக பெய்து வரும் அடை மழை காரணமாக தோட்ட தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது மட்டுமல்லாமல் குடும்ப வருமானத்திற்காக விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த அதிகமானோர் மழை காரணமாகவும் வெள்ளம் காரணமாகவும் தமது தோட்டங்களில் பயிரிடப்பட்ட மரக்கறி வகைகள் அனைத்தும் வெள்ளத்தினால் அடித்து செல்லப்பட்டதால் பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கினறனர்.

அக்கரப்பத்தனை, டயகம, ஹோல்புறூக், பத்தனை, தலவாக்கலை, பூண்டுலோயா, கொட்டகலை, ஹற்றன், பொகவந்தலாவ போன்ற பகுதிகளில் சிறு விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆறுகள் பெருக்கெடுத்ததால் மரக்கறி தோட்டங்களில் வெள்ளம் பாய்ந்தோடியதால் இப்பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இது இவ்வாறிருக்க, மலையகத்தில் பெய்யும் கன மழையினால் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால், அதன் அண்மையில் உள்ள மக்களை மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஹற்றன் – கொழும்பு பிரதான வீதியிலும் ஹற்றன் – நுவரெலியா பிரதான வீதியிலும், நுவரெலியா பதுளை வீதியிலும், நுவரெலியா, கண்டி வீதியிலும் மண்சரிவு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் இவ்வீதி வழுக்குவதற்கான அபாயம் இருப்பதாகவும் வாகன சாரதிகளை அவதானமாக வாகனங்களை செலுத்துமாறும் பொலிஸார் கேட்டுக்கொள்கின்றனர்.

ஹற்றன் விசேட, ஹற்றன் சுழற்சி, நோட்டன் பிரிஜ் நிருபர்கள்

 

Sat, 07/20/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை