ஈரான் அணு உடன்படிக்கையை பாதுகாக்கும் பேச்சுக்கு இணக்கம்

உலகின் சக்தி வாய்ந்த நாடுகள் மற்றும் ஈரானுக்கு இடையிலான அணு ஒப்பந்தத்தை பாதுகாப்பது குறித்த பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்க பிரான்ஸ் மற்றும் ஈரான் நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன.

இதனை பிரான்ஸ் ஜனாதிபதி எம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

2015ஆம் ஆண்டு ஈரானுக்கும் அமெரிக்கா உள்ளிட்ட 6 நாடுகளுக்கும் இடையில் அணு ஒப்பந்தம் ஏற்பட்டது. இதனை கைவிடுவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஜனாதிபதி மக்ரோன், ஈரான் ஜனாதிபதி ஹசன் ரூஹானியிடம் தொலைபேசியில் பேசும்போது கவலை தெரிவித்தார்.

ஈரானின் அணு திட்டத்தை முடக்கும் வகையில் போடப்பட்ட இந்த ஒப்பந்தத்தை பாதுகாக்க விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு ஐரோப்பிய நாடுகளுக்கு ஜனாதிபதி ரூஹானி அழைப்பு விடுத்துள்ளார்.

கடந்த ஆண்டு இந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியதில் இருந்து பல குழப்பங்கள் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஈரான் மீது மீண்டும் தடைகளை கொண்டுவந்தோடு, இதற்கு பதில் நடவடிக்கையாக செறிவூட்டப்பட்ட யுரேனிய உற்பத்தியை மேற்கொள்ளும் நடவடிக்கையை ஈரான் முன்னெடுத்தது.

இது மின் உற்பத்திக்கு பயன்படுகின்றபோதும் அணு குண்டு தயாரிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்துகிறது.

ஈரான் ஏற்கனவே செறிவூட்டப்பட்ட யுரேனிய கையிறுப்பை வைத்திருப்பதோடு அது தொடர்பில் சர்வதேச நாடுகளுடன் போடப்பட்ட உடன்படிக்கையை மீறுவதாக ஈரான் அறிவிக்க திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவின் தடைகளுக்கு மத்தியில் ஈரானுடனான அணுசக்தி உடன்படிக்கையை காப்பற்றுவதில் ஐரோப்பிய நாடுகள் போராடி வருகின்றன. முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த ஒப்பந்தம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருப்பதாக அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் பிரான்ஸ் ஜனாதிபதி வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், ஈரான் ஜனாதிபதியுடன் தாம் ஒரு மணி நேரத்திற்கு மேற்பட்ட காலம் உரையாடியதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த உடன்படிக்கை மேலும் பலவீனப்படுவது குறித்து மக்ரோன் இந்த உரையாடலில் கவலை வெளியிட்டுள்ளார். அனைத்து தரப்புகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பது குறித்து ஜூலை 15 ஆம் திகதி ஆராய இரு தலைவர்களுக்கும் இடையில் இணக்கம் எட்டப்பட்டுள்ளது.

ஈரான் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுக்கப்பட்ட காலக்கெடுவை தாண்டி இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

இந்த அணுசக்தி உடன்படிக்கையில் தொடர்ந்து உள்ள ஐந்து நாடுகளும் தடைகளில் இருந்து ஈரானுக்கு பாதுகாப்பு அளிப்பதற்கு ஞாயிற்றுக்கிழமை வரை ரூஹானி முன்னதாக கெடு விதித்திருந்தார்.

பதற்றத்தை தணிப்பதற்கு ஈரான் மற்றும் சர்வதேச தரப்புகளுடன் மக்ரோன் தொடர்ந்து ஆலோசனை நடத்தும் என்றும் பிரான்ஸ் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

2015ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அணுசக்தி ஒப்பந்தம் மூலம், செறிவூட்டப்பட்டு யுரேனியத்தில் அதிகமாக இருப்பவற்றை சேமித்து கொள்ளாமல் ஈரான் வெளிநாடுகளுக்கு விற்க வேண்டும்.

அணு மின்சார உற்பத்தி செய்யும்போது கிடைக்கின்ற செறிவூட்டிய யுரேனியத்தை சேமித்து வைத்துகொண்டால் ஈரான் அணு ஆயுதங்களை செய்வதற்கு பயன்படுத்தி கொள்ள முடியும்.

செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஈரான் வெளிநாடுகளுக்கு விற்பதன் மூலம், அணு மின்சாரம் தயாரிப்பதை ஈரான் தொடர்கின்ற வேளையில், அது அணு ஆயுதங்களை தயாரிக்காமல் இருப்பதையும் உறுதி செய்துகொள்ள முடியும்.

Mon, 07/08/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை