இலங்கையை வென்ற இந்தியா நியூசிலாந்துடன் அரையிறுதியில்

இலங்கைக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியதன் மூலம் இந்திய அணி உலகக் கிண்ணப் போட்டியின் புள்ளிப்பட்டியலில் முதலித்தைப் பிடித்தது.

இதன்மூலம் இந்திய அணி ஓல்ட் டிரபர்ட்டில் நாளை (09) நடைபெறும் முதலாவது அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்ளவுள்ளது.

ஹெடிங்லியில் சனிக்கிழமை நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி நிர்ணயித்த 265 ஓட்ட வெற்றி இலக்கை இந்திய அணி 6.3 ஓவர்களை மிச்சம் வைத்து எட்டியதோடு, உலகக் கிண்ண தொடர் ஒன்றில் ஐந்து சதங்கள் பெற்ற முதல் வீரராக ரோஹித் ஷர்மான பதிவானார்.

55 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இலங்கை அணியை அஞ்சலோ மத்தியூஸ் 113 ஓட்டங்களை பெற்று மீட்டார். இதன்மூலம் இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 264 ஓட்டங்களை பெற்றது.

இதன்போது லஹிரு திரிமான்ன மற்றும் மத்தியூஸ் 5 ஆவது விக்கெட்டுக்கு 124 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டனர். திரிமான்ன 68 பந்துகளில் 53 ஓட்டங்களை பெற்றார்.

இந்திய அணி சார்பில் பந்துவீச்சில் மிரட்டிய ஜெஸ்பிரிட் பூம்ரா 37 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தொடர்ந்து பதிலெடுத்தாடிய இந்திய அணிக்கு கே.எல். ராகுல் மற்றும் ரோஹித் ஷர்மா ஆரம்ப விக்கெட்டுக்கு 189 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டனர். ராகுல் 111 ஓட்டங்களை பெற்றமை குறிப்பிடத்தக்கது. இதன்படி இம்முறை உலகக் கிண்ணத்தில் இலங்கை அணி புள்ளிப்பட்டியலில் 6 ஆவது இடத்தை பிடித்தது.

Mon, 07/08/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை