ஐ நா. விசேட தூதுவர் நீதித்துறையில் எந்தவித தலையீடும் செய்யவில்லை

ஐக்கிய நாடுகள் சபையின் விசேட தூதுவர் இலங்கையின் நீதித்துறையில் எந்தவித தலையீ டும் செய்யவில்லையென்றும் நடைமுறையிலு ள்ள, விதிகளின்படியே வெளிவிவகார அமைச்சு செயற்பட்டுவருவதாகவும் அமைச்சர் திலக் மாரப்பன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஐ.நா. விசேட தூதுவருடனான சந்திப்பு தொடர்பில் வெளிவிவகார அமைச்சின் மேலதிக பதில் செயலாளரினால் அனுப்பப்பட்ட கடிதத்தில் எந்த ஒழுங்கு விதிகளும் மீறப்படவில்லை என குறிப்பிட்ட வெளிவிவகார அமைச்சர், மக்களை திசை திருப்புவதற்காக எதிர்க்கட்சியினர் அக்கடிதத்தை திரிபுபடுத்தி கருத்துக்களை வௌியிடுவதாகவும் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன சபையில் குற்றம்சாட்டினார். பாராளுமன்றத்தில் நேற்று (25) ஐ.நா.விசேட தூதுவருடன் பிரதம நீதியரசர் மற்றும் மேல் நீதிமன்ற நீதியரசர்களை சந்திக்க விடுக்கப்பட்ட அழைப்பு தொடர்பான சர்ச்சைக்கு வெளிவிவகார அமைச்சின் சார்பில் விளக்கமளிக்கையிலேயே அமைச்சர் திலக் மாரப்பன இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐ.நா.விசேட தூதுவருடனான சந்திப்பு என்பது புதிய விடயமல்ல. இதற்கு முன்னர் 5 தடவைகள் இவ்வாறான சந்திப்புக்கள் இடம்பெற்றுள்ளன.. எதிர்க்கட்சியினரைவிடவும் இலங்கையின் சுயாதீன நீதிச் சேவைக்குள் வெளியார் தலையீடு இருக்கக்கூடாதென்பதில் நான் 100 மடங்கு அதிக அக்கறை உள்ளவன்.

ஐ.நா விசேட தூதுவரின் இலங்கை விஜயம் தொடர்பிலான சகல ஏற்பாடுகளையும் குறிப்பிட்ட சந்திப்புக்களுக்கான ஒழுங்குகளையும் வெளிவிவகார அமைச்சே மேற்கொள்கின்றது.

அந்த வகையிலேயே ஐ.நா. விசேட தூதுவருடனான சந்திப்பு ஒன்றில் பிரதம நீதியரசர், மேல் நீதிமன்ற நீதியரசர்கள் பங்கேற்க முடியுமா என்ற கோரிக்கை கடிதம் ஒன்று நீதி அமைச்சுக்கு அனுப்பப்பட்டது.எனினும் பிரதம நீதியரசருக்கோ அல்லதுமேல்நீதிமன்ற நீதியரசர்களுக்கோ இக்கடிதம் அனுப்பப்படவில்லை. இந்த கடிதத்தில் எந்த விதமான ஒழுங்கு விதிகளும் மீறப்படவில்லை.

ஐ.நா. விசேட தூதுவருடனான 20 சந்திப்புக்களில் இதுவும் ஒன்றாக இருந்தது. ஐ.நா.விசேட தூதுவர் ஏற்கனவே பொலிஸ் மாஅதிபர்.சட்ட மாஅதிபர் ஆகியோரை சந்தித்திருந்தார். நீதித்துறையினருடனான சந்திப்பின்போது சில வேளைகளில் முக்கிய வழக்கு விசாரணைகள் தொடர்பில், ஏதாவது கேள்விகளை எழுப்பினால் அதற்கு பதிலளிக்க வேண்டுமென்பதற்காகவே அவரை சந்திக்க முடியுமாவென்ற கடிதம் அனுப்பப்பட்டது.

எனவே ஐ.நா. விசேட தூதுவருடனான சந்திப்பு தொடர்பில் வெளிவிவகார அமைச்சின் மேலதிக பதில் செயலாளரினால் அனுப்பப்பட்ட கடிதத்தில் எந்த ஒழுங்கு விதிகளும் மீறப்படவில்லை. எதிர்க்கட்சியினர் மக்களை திசை திருப்புவதற்காக அக்கடிதத்தை திரிபுபடுத்தி உள்ளனர் என்றும் அமைச்சர் தெரிவித்தார்

லோரன்ஸ் செல்வநாயகம், மகேஸ்வரன் பிரசாத் 

 

Fri, 07/26/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை