ஆஸி. குப்பைகளை திருப்பி அனுப்பும் இந்தோனேசியா

அவுஸ்திரேலியாவிடம் இருந்து வந்த 210 தொன்கள் குப்பைகளை இந்தோனேசியா அந்நாட்டுக்கு திருப்பி அனுப்பியுள்ளது.

சுரபயா நகரில் கைப்பற்றப்பட்ட எட்டு கொள்கலன்களிலான குப்பைகளில் காகிதக் குப்பைகள் மாத்திரம் இருப்பதாகக் கூறப்பட்டபோதும் அதில் பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் பொதிகள், பயன்படுத்தப்பட்ட அணையாடைகள், மின்னணுக் குப்பைகள் போன்ற பொருட்களும் இருப்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர்.

இந்த சோதனையை அடுத்து குப்பைகளை திரும்ப ஏற்றுமதி செய்வதற்கு சுற்றுச்சூழல் அமைச்சு உத்தரவிட்டது.

அவுஸ்திரேலியாவின் ஓசியானிக் மல்டி டிரேடிங் என்ற நிறுவனம் உள்நாட்டு நிறுவனம் ஒன்றின் உதவியோடு இந்த குப்பைகளை இந்தோனேசியாவுக்கு ஏற்றுமதி செய்திருப்பதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

மீள் சூழற்சிக்காக வெளிநாட்டு பிளாஸ்டிக் குப்பைகளை இறக்குமதி செய்வதை சீனா 2018 ஆம் ஆண்டு நிறுத்தியதை அடுத்து, அபிவிருத்தி அடைந்த நாடுகள் தமது குப்பைகளை அனுப்புவதற்கு இடமின்றி போராடி வருகின்றன.

இந்நிலையில் பெருமளவான குப்பைகள் தென்கிழக்கு ஆசிய பக்கம் அனுப்பப்பட்டபோதும் அதற்கு பெரும் எதிர்ப்புகள் வெளியாகி வருகின்றன.

Wed, 07/10/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை