போதைப்பொருளுக்கு எதிரான போரில் நான் தனிமைப்படவில்லை

போதைப்பொருளுக்கு எதிரான போரில் தாம் தனிமைப்படவில்லை என்றும் 90 சதவீதமான நாட்டு மக்கள் அப்போராட்டத்தில் தம்முடன் இணைந்திருப்பதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனையை வழங்க, தாம் மேற்கொண்ட தீர்மானத்திற்கு எதிராக அரசாங்கத்தில் பொறுப்புக் கூறவேண்டியவர்களே வீதியில் இறங்கும்போது போதைப்பொருள் கடத்தல்காரர்களும் குற்றவாளிகளும் ஊழல்வாதிகளும் மோசடிக்காரர்களும் வெற்றிப் பெருமிதம் கொள்கின்றனர் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இரத்தினபுரியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

எதிர்கால தலைமுறையினருக்காக சிறந்ததோர் நாட்டை கட்டியெழுப்புவதற்காகவே, தாம் அனைத்து தீர்மானங்களையும் மேற்கொள்வதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, அரசியல்வாதிகள், அரசாங்க அதிகாரிகள், கல்விமான்கள் உள்ளிட்ட அனைவரும் ஒன்றிணைந்து தாய்நாட்டுக்காக மேற்கொள்ள வேண்டிய பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவேற்ற முன்வர வேண்டும் என்றும்கேட்டுக் கொண்டார்.

“அழகிய சப்ரகமுவ” நிகழ்ச்சித்திட்டத்தை அறிமுகப்படுத்துதல் மற்றும் கித்துள் தொடர்பான சட்ட வரைவை வெளியிடுதல் தொடர்பான நிகழ்வு நேற்று சப்ரகமுவ மாகாண சபை கட்டிடத்தொகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

“அழகிய சபரகமுவ” என்ற பெயர்ப்பலகையை ஜனாதிபதி திரைநீக்கம் செய்து வைத்தார்.

அதனையொட்டி தொகுக்கப்பட்டுள்ள நூலும் சப்ரகமுவ மாகாண ஆளுநர் தம்ம திசாநாயக்கவினால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

“அழகிய சபரகமுவ” நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் சபரகமுவ மாகாண சபையினால் 125 மில்லியன் ரூபா செலவில் எஹெலியகொட பொது வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 05 மாடி கட்டிடத்தின் 120 படுக்கைகள் கொண்ட வாட்டுத்தொகுதி எஹெலியகொட பிரதேசத்தின் இரண்டு கொடையாளர்களினால் 65 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பிக்குகளுக்கான புதிய வாட்டுத்தொகுதி, வர்த்தகர் ஒருவரினால் 50 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள எக்ஸ் ரே பிரிவையும் ஜனாதிபதி திறந்து வைத்தார்.

சப்ரகமுவ மாகாண சபையினால் நடைமுறைப்படுத்தப்படும் “எமது வீடு அழகானது” என்ற திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட 100 குடும்பங்களுக்கு வீட்டு நிர்மாணப் பணிகளுக்கான அனுசரணை வழங்கப்படவுள்ளதுடன், அவர்களுக்கான ஆவணங்களை ஜனாதிபதி வழங்கி வைத்தார். இதன்போது ஜனாதிபதிக்கு நினைவுச் சின்னமொன்றும் வழங்கி வைக்கப்பட்டது.

வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன், ஊவா மாகாண ஆளுநர் சட்டத்தரணி மார்ஷல் பெரேரா உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

(காவத்தை விசேட நிருபர்)

Tue, 07/30/2019 - 06:05


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை