பாதுகாப்பான புகையிரத கடவை அமைக்க கோரி மக்கள் போராட்டம்

படங்கள்: பரந்தன் குறூப் நிருபர்

கிளிநொச்சியில் பாதுகாப்பான புகையிரத கடவை அமைத்து தருமாறு கோரி 155 ஆம் கட்டை காளி கோவிலடி பிரதேச மக்கள் நேற்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந் நிலையில் இக் கவனயீர்ப்பு தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் தெரிவிக்கையில்,

ஏழு கிராமங்கள், 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் பயன்படுத்துகின்ற இப் பிரதான வீதியில் பாதுகாப்பான புகையிரத கடவை அமைக்கப்படாததன் காரணமாக இதுவரை பல விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. எட்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

இக் கடவையில் பொருத்தப்பட்டிருந்த சமிஞ்சை விளக்குகளும் உரிய முறையில் செயற்படுவதில்லை. குறித்த சமிஞ்சை விளக்குகள் எந்த நேரத்தில் இயங்கும் எந்த நேரத்தில் இயங்காது என கூற முடியாத நிலையில் காணப்படுகிறது.

இதுவும் விபத்துக்கு காரணம். எனவே குறித்த கடவையை பாதுகாப்பான கடவையாக மாற்ற வேண்டும் என்பதனை வலியுறுத்துகிறோம் என தெரிவித்தனர்.

இதன்போது போராட்டம் இடம்பெற்ற இடத்திற்கு புகையிரத திணைக்களத்தின் வடக்கு கிழக்குக்கு பொறுப்பான அதிகாரி, அநுராதபுரம் காங்சேன்துறை புகையிரத பாதைக்கு பொறுப்பான அதிகாரி, மற்றும் புகையிரத பாதை சமிஞ்சை பொறியிலாளர் ஆகியோர் வந்திருந்தனர்.

அத்துடன் இந்த விடயம் தொடர்பில் அதிக கவனம் செலுத்துவதாகவும், உடனடியாக புகையிரத பாதையின் இரு புறமும் வேகக் கட்டுப்பாட்டு தடை ஒன்றை அமைத்து தருவதோடு, பொது மக்களின் கோரிக்கை கடிதம் கிடைத்ததும் நிரந்தர பாதுகாப்புக்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள முயற்சிப்பதாகவும் தெரிவித்தனர்.

கிளிநொச்சி குறூப் நிருபர்

Thu, 07/04/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை