மருந்துகளை எதிர்க்கும் மலேரியா தென் கிழக்கு ஆசியாவில் பரவல்

தடுப்பு மருந்துகளை எதிர்க்கும் தன்மை கொண்ட மலேரியா நோய்க்கிருமி வகை ஒன்று கம்போடியாவிலிருந்து வியட்நாம், லாவோஸ், வடக்கு தாய்லாந்து ஆகிய பிராந்தியங்களில் பரவி வருவதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

KEL1/PLA1 என்ற அந்த மலேரியா கிருமியின் பரவலை மரபணு கண்காணிப்பு வழியாகக் கண்டறிந்த விஞ்ஞானிகள், மருந்துகளை எதிர்க்கும் அக்கிருமியின் ஆற்றல் கூடி வருவதாகக் கூறுகின்றனர்.

2017ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 220 மில்லியன் பேர் மலேரியா பரவலால் பாதிக்கப்பட்டதாக உலக சுகாதார அமைப்பு மதிப்பிட்டுள்ளது. அவர்களில் 400,000 பேர் அந்நோயால் உயிரிழந்தனர். இந்த மரணங்கள், பெரும்பாலும் ஆபிரிக்கக் கண்டத்தின் மத்திய பகுதியில் நேர்வதாகக் கூறப்படுகிறது.

தென்கிழக்காசியாவில் மலேரியாவுக்கு எதிராக டி.எச்.ஏ – பீ.பீ.கியு என்ற மருந்து பயன்படுத்தப்படுகிறது. எனினும் கம்போடியாவில் 2007ஆம் ஆண்டுக்கும் 2013ஆம் ஆண்டுக்கும் இடையே பரவிய மலேரியா கிருமி வகை ஒன்று உருவாகியுள்ளதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். தடுப்பு மருந்துகளை எதிர்க்கும் இந்த மலேரியா கிருமி வகை இவ்வளவு வேகமாகப் பரவுவது மிகவும் கவலை அளிப்பதாக ஆய்வை இணைந்து வழிநடத்திய விஞ்ஞானி ஒலிவோ மியோட்டோ தெரிவித்தார்.

‘லன்செட் இன்பெக்‌ஷியல் டிசீசஸ்’ என்ற மருத்துவ சஞ்சிகையில் இந்த ஆய்வு விபரம் வெளியிடப்பட்டது.

“இந்தக் கிருமிக்கு எதிராக வேறு மருந்துகள் வேலை செய்யலாம். ஆனால் நிலைமை இப்போது மிகவும் இக்கட்டாக உள்ளது. உடனடி நடவடிக்கை தேவை என்பதை இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது” என்று மியோட்டோ கூறினார்.

Wed, 07/24/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை