சட்டத்தை தனிமனிதன் கையிலெடுக்க வாய்ப்பை ஏற்படுத்த கூடாது

நாட்டை சீர்குலைக்கும் ஆர்ப்பாட்டங்கள் தடுக்கப்பட வேண்டும் - மஹ்ரூப் எம்.பி

பொதுபல சேனாவின் பொது செயலாளர் ஞானசார தேரரும் எதிர்வரும் ஏழாம் திகதி நாட்டை சீர்குலைப்பதற்கும், பாரிய ஆர்ப்பாட்டத்திற்கும் அழைப்பு விடுத்திருக்கின்றார். இதனை தடுக்காவிட்டால் இத் தனி மனிதன் நாட்டையும், சட்டத்தையும் கையிலெடுக்க சந்தர்ப்பமாக அமையும் என பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஃறூப் தெரிவித்தார்.

கந்தளாயில் பல அபிவிருத்தி திட்டங்கள் திறப்பு விழாவும் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்றுமுன்தினம் (30) இடம்பெற்றது, இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமது அமைச்சர்களும், இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்களும், கடந்த மூன்றாம் திகதி இராஜினாமா செய்த போது இந்த அரசுக்கு பல நிபந்தனைகளை விதித்தோம். முஸ்லிம் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது, மத்ரஸாக்களை பாதுகாப்பது, அப்பாவி உலமாக்களை கைது செய்யப்பட்டவர்களை விடுப்பது மற்றும் முஸ்லிம் பெண்களின் ஆடைகளுக்கு சட்ட அங்கீகாரம் வழங்க வேண்டும்.

முஸ்லிம் அரசியல் தலைவர்கள் அன்று இராஜினாமா செய்யா விட்டால் இந்நாட்டில் பாரிய இனக்கலவரம் ஏற்பட்டிருக்கும்.

அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாத காலம் நீடிக்கப்பட்டிருக்கின்றது. ஞானசார தேரரின் ஊர்வலம் தடுக்கப்பட வேண்டும். இவை தொடர்பாக ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும், பாதுகாப்பு அமைச்சருக்கும் பொலிஸ் மாஅதிபருக்கும்,இவ்விடயம் தொடர்பாக மகஜர் கையளிக்க உள்ளோம்.

முஸ்லிம் மக்களை பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியதோடு,எமது முஸ்லிம் பெண்களின் ஆடை விடயம் இன்று சட்ட ரீதியாக அணியலாம் என்றொரு நிலைக்கு வந்துள்ளது. அடுத்து வரும் தேர்தலில் நாட்டிற்கு சாபக்கேடற்ற ஒரு ஜனாதிபதியை முஸ்லிம் சமூகம் ஒன்றிணைந்து கட்சி பேதமற்ற முறையில் தெரிவு செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.

(கந்தளாய் தினகரன், திருமலை மாவட்ட விசேட,

முள்ளிப்பொத்தா​ைன தினகரன் நிருபர்கள்)

 

Tue, 07/02/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை