முதன்மையான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் உலகக் கிண்ணத்தை வெல்ல முடியும்

தலைவர் இயன் மோர்கன்

இந்தியாவுக்கு எதிராக விளையாடியது போல இங்கிலாந்து அணி தனது முதன்மையான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் நிச்சயம் கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை வெல்ல முடியும் என தான் நம்புவதாக இங்கிலாந்து அணித் தலைவர் இயன் மோர்கன் தெரிவித்துள்ளார்.

ஜொன்னி பெயர்ஸ்டோவின் அபார சதம் மற்றும் கட்டுக்கோப்பான பந்துவீச்சு ஆகியவற்றின் உதவியுடன் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 31 ஓட்டங்களினால் வெற்றிபெற்று இம்முறை உலகக் கிண்ணத் தொடரில் இந்தியாவுக்கு முதல் தோல்வியை பரிசளித்தது.

இந்தப் போட்டித் தொடரில் தோல்வியை சந்திக்காத அணியாக வலம்வந்த இந்திய அணி முதல் தோல்வியை சந்தித்து இருந்தது. அத்துடன், உலகக் கிண்ண வரலாற்றில் சுமார 27 வருடங்களுக்குப் பிறகு இந்தியாவை வீழ்த்தி மற்றுமொரு சாதனையையும் இங்கிலாந்து நிலைநாட்டியது.

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி 8 போட்டிகளில் விளையாடி 5இல் வெற்றி, 3 தோல்விகள் என 10 புள்ளிகளுடன் 4ஆவது இடத்துக்கு முன்னேறியது.

இதனால் அரையிறுதிக்கான வாய்ப்பையும் பிரகாசப்படுத்திக் கொண்டது. ஆனால், அவ்வணி இறுதியாக விளையாடவுள்ள நியூசிலாந்துடனான லீக் ஆட்டத்தில் கட்டாயம் வெற்றிபெற வேண்டும்.

இந்த நிலையில், போட்டியின் பிறகு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்தியாவுடனான வெற்றி குறித்து கருத்து தெரிவித்த இயன் மோர்கன்,

“இன்று நாங்கள் விளையாடிய விதம் மிகச்சிறந்ததாக இருந்தது. இது உடைமாற்றும் அறையில் உள்ள அனைவரிடமும் எதிரொலிக்கிறது. இது ஒரு சிறந்த அணியொன்றுக்கு எதிராக ஒரு நல்ல நேரத்தில் கிடைத்த வெற்றியாகும்.

இங்கிலாந்து இன்னும் உலகக் கிண்ணத்தை வெல்லவில்லை. ஆனால், இன்று நாங்கள் எப்படி விளையாடியது என்பது எங்களுக்கு மிகவும் ஊக்கமளிக்கிறது. எங்கள் முதல்தர ஆட்டத்தை விளையாடுவதற்கு நெருக்கியுள்ளோம்.

இதனால் எல்லா வழிகளிலும் முன்நோக்கிச் செல்ல எங்களுக்கு அதிக வாய்ப்பு உள்ளது. இதுபோன்ற ஆட்டத்தை கடந்த நான்கு வருடங்களில் நாங்கள் விளையாடியது கிடையாது.

போட்டியின் துவக்கத்தில் இருந்தே நாங்கள் சிறப்பாக விளையாடியதாக நினைக்கிறேன். துடுப்பாட்டத்தில் துவக்கத்திலேயே அதிக ஓட்டங்களை குவித்துவிட்டது எங்களுக்கு மிகப்பெரும் சாதகமாக அமைந்துவிட்டது. இன்றைய போட்டியில் நாங்கள் மிக சிறப்பாக விளையாடியதை போன்று உணர்கிறேன்” என தெரிவித்தார்.

ஜேசன் ராய் மீண்டும் அணிக்குத் திரும்பியது தொடர்பில் மோர்கன் கருத்து வெளியிடுகையில், “அவர் அணியில் மீண்டும் விளையாடுவது மிகப் பெரிய நம்பிக்கையை கொடுத்துள்ளது.

அவர் துடுப்பாட்டத்தில் மிரட்டுகிறார். அவருக்கு எதிராக பந்து வீசுவது மிகவும் கடினம். உண்மையில் அவர் ஒரு துப்பாக்கியைப் போன்ற வீரர். அதேபோல, ஜொன்னி பெயர்ஸ்டோவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். அவருடைய சதமும் இந்த வெற்றிக்கு முக்கிய காரணம்.

பென் ஸ்டோக்ஸ் வித்தியாசமான ஆட்டமொன்றை விளையாடியிருந்தார்.

அவருடைய இன்னிங்ஸ் இங்கு முக்கிய இடத்தை வகித்தது” என குறிப்பிட்டார்.

அடிக்கடி பேசப்படாத கிறிஸ் வோக்ஸை இதன்போது மோர்கன் பாராட்டினார்.

அவர் கவனிக்கப்படாத ஒரு பையன், ஆனால் அவர் எங்களுக்கு மிகவும் மதிப்புமிக்க வீரர் மற்றும் முதல் 10 ஓவர்களில் எங்களுக்கு இருக்கின்ற ஒரு சிறந்த சொத்து.

அணிக்குள் மீண்டும் வந்து 55 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய லியெம் பிளெங்கட் குறித்து பேசிய மோர்கன், மிகவும் அனுபவம் வாய்ந்த வீரரிடமிருந்து ஒரு சிறந்த முயற்சி என்று கூறினார்.

எதிர்வரும் புதன்கிழமை டர்ஹமில் நடைபெறவுள்ள இறுதி லீக் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தினால் கடைசி நான்கு அணிகளில் இடம்பிடிக்க முடியும் என்று மோர்கன் கூறினார்.

Tue, 07/02/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை