அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்துக்கொள்ள கட்டாய வெற்றிக்காக களமிறங்கும் இலங்கை

உலகக் கிண்ண அரையிறுதிக்கு நுழைவதற்கான வாய்ப்பு இன்னும் இருக்கும் நிலையில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி இன்று களமிறங்கவுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 20 ஓட்டங்களால் வெற்றியீட்டியதன் மூலம் எதிர்பார்ப்பை தக்கவைத்துக் கொண்ட இலங்கை தென்னாபிரிக்காவுடனான போட்டியில் மோசமான தோல்வி ஒன்றை சந்தித்ததால் அரையிறுதி வாய்ப்பில் பெரும் பின்னடைவை எதிர்கொண்டுள்ளது.

1996 உலக சம்பியனான இலங்கை தற்போது 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 7ஆவது இடத்தில் உள்ளது. அந்த அணி தனது கடைசி இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெறுவது கட்டாயமாகும். அதேபோன்று ஏனைய அணிகளின் போட்டிகள் தமக்கு சாதகமாக முடிந்தால் மாத்திரமே இலங்கையால் அரையிறுதிக்கு முன்னேற முடியும்.

கடைசியாக தென்னாபிரிக்காவுடனான போட்டியில் இலங்கை அணி பெற்ற 9 விக்கெட் வித்தியாசத்திலான தோல்வி இலங்கை துடுப்பாட்ட வரிசை இன்னும் பலமடையவல்லை என்பதையே கட்டுகிறது.

இந்த தொடரியில் துடுப்பாட்டத்தில் சோபித்துவந்த அணித்தலைவர் திமுத் கருணாரத்ன போட்டியின் முதல் பந்துக்கே அநாவசிமான முறையில் ஆட்டமிழந்த நிலையில் மேற்கிந்திய பந்துவீச்சு சவாலை சமாளிப்பது அவரது பொறுப்பாக உள்ளது.

அதேபோன்று ஆரம்ப வீரர் குசல் பெரேராவும் தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்துவது கட்டாயமாகும். இளம் வீரர் அவஷ்க பெர்னாண்டோ நேர்த்தியாக துடுப்பெடுத்தாடியபோதும் பொறுப்புடன் ஆடினால் சாதகமாக அமையும்.

எல்லாவற்றுக்கும் மேலே மத்திய வரிசையில் அனுபவ வீரர் அஞ்சலோ மத்தியுஸ், குசல் மெண்டிஸ் மற்றும் தனஞ்சய டி சில்வா சோபிக்காவிட்டால் இலங்கைக்கு வெற்றி என்பது எட்டாக்கனியாகவே தொடரும்.

பந்துவீச்சில் லசித் மாலிங்க போட்டியை திசைதிருப்பும் திறன் கொண்டவர் என்றபோதும் ஏனைய வீரர்களின் ஒத்துழைப்பு அவசியமாகும். குறிப்பாக சின்னம்மை காரணமாக நுவன் பிரதீப் அணியில் இடம்பெறாதது சற்றுப் பின்னடைவாகும்.

மறுபுறம் அரையிறுதி வாய்ப்பை இழந்திருக்கும் ஜேசன் ஹோல்டர் தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் அணி தொடரை வெற்றிகளுடக் முடிப்பதற்கு எதிர்பார்க்கும்.

மேற்கிந்திய தீவுகளின் துடுப்பாட்டத்தில் கிரிஸ் கெயில், கார்லோஸ் பிராத்வைட், ஷிம்ரொன் ஹெட்மையர் மற்றும் நிக்கோலஸ் புூரன் என அதிரடி துடுப்பாட்ட வீரர்கள் இருப்பதுடன், பந்துவீச்சில் ஷெல்டொன் கொட்ரல், ஒசானே தோமஸ் மற்றும் ஷெனொன் கேப்ரியல் என எதிரணியை மிரட்டக்கூடிய பந்துவீச்சாளர்களும் உள்ளனர்.

மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகளது கடந்தகால ஒருநாள் மோதல்களை பார்க்கும் போது மேற்கிந்திய தீவுகள் அணி அதிகம் சாதகம் கொண்ட அணியாக உள்ளது. இரண்டு அணிகளுக்கும் இடையில் 56 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ளதுடன், அதில் மேற்கிந்திய தீவுகள் 28 போட்டிகளிலும், இலங்கை அணி 25 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளதுடன், 3 போட்டிகளில் முடிவு கிட்டியிருக்கவில்லை.

கடந்தகால உலகக் கிண்ண சந்திப்புகளிலும் மேற்கிந்திய தீவுகள் அணி 4 வெற்றிகளை பெற்றுள்ளதுடன், இலங்கை அணி 2 வெற்றிகளை பெற்றுள்ளது. இந்த இரண்டு வெற்றிகளையும் இலங்கை அணி 2003 மற்றும் 2007ஆம் ஆண்டுகளில் பெற்றுள்ளது. இதற்கு அப்பால் 1996ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரில் மேற்கிந்திய தீவுகள், இலங்கை வர மறுத்ததன் காரணமாக வெற்றி இலங்கை அணிக்கு வழங்கப்பட்டிருந்தது.

அதேநேரம், இரண்டு அணிகளும் இறுதியாக சிம்பாப்வேயில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் தொடரில் இரண்டு போட்டிகளில் மோதியிருந்ததுடன், அதில் இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு வெற்றிகளை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இன்றைய போட்டி நடைபெறும் ரிவர்சைட் மைதானத்தின் ஆடுகளமானது கடந்த போட்டியில் இலங்கை அணி துடுப்பெடுத்தாடும் போது, துடுப்பாட்ட வீரர்களுக்கு கடினமான ஆடுகளமாக தெரிந்த போதும், தென்னாபிரிக்க அணி துடுப்பெடுத்தாடும் போது துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமான ஆடுகளமாக தெரிந்தது. எவ்வாறாயினும், இன்றைய போட்டியில் குறித்த ஆடுகளம் துடுப்பாட்ட வீரர்களுக்கே சாதகமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரம், இன்றைய போட்டியின் காலநிலையை பொருத்தவரை மேகங்கள் சூழ்ந்த காலநிலை நிலவும் எனவும் மழை குறுக்கிடுவதற்கான வாய்ப்புகளும் உள்ளது. எவ்வாறாயினும், முடிவு கிடைக்கும் போட்டியாக இன்றைய போட்டி அமையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Mon, 07/01/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை