கிழக்கு மாகாண தமிழ்த் தின போட்டியில் திருமலை மாவட்ட கல்வி வலயம் முதலிடம்

கிழக்கு மாகாணத்திற்கான அகில இலங்கை தமிழ் மொழித்தின போட்டியில் திருகோணமலை கல்வி வலயம் முதலிடத்தை பிடித்துள்ளது.

அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலையில் நடைபெற்ற மாகாண மட்ட போட்டிகளில் பெற்றுக்கொண்ட புள்ளிகளின் அடிப்படையில் திருகோணமலை கல்வி வலயம் முதலிடத்தையும், மட்டக்களப்பு கல்வி வலயம் இரண்டாம் இடத்தினையும் பட்டிருப்பு கல்வி வலயம் மூன்றாம் நிலையையும் பெற்றுக்கொண்டதுடன் பாடசாலை மட்டத்தில் திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரி முதல் நிலையையும் மட்டக்களப்பு சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலை இரண்டாம் நிலையினையும் மட்டக்களப்பு விவேகானந்தா மகளிர் கல்லூரி மூன்றாம் நிலையினையும் அடைந்துள்ளன.

இந் நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் ஷான் விஜேயலால் டி சில்வா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கான பதக்கங்களை அணிவித்ததுடன் சான்றிதழ்களையும் வெற்றி கிண்ணங்களையும் வழங்கி வைத்தார்.

கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம். மன்சூர் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பல் சமய பாரம்பரியங்களை நினைவூட்டும் மாணவர்களின் நடன நிகழ்வுகளும் அலங்கரிக்கப்பட்ட வாகன பவனிகளும் ஆலையடிவேம்பு பிரதேச செயலக முன்பாகவிருந்து ஆரம்பமாகி அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலய சந்தியை சென்றடைந்தது.

இதன்போது மாணவர்களின் கலை நிகழ்வுகளும் அரங்கேற்றப்பட்டன. போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஆளுநரினால் பதக்கங்கள் அணிவிக்கப்பட்டதுடன் அவர் சான்றிதழ்களையும் வழங்கி வைத்தார்.

விசேடமாக வலய மற்றும் பாடசாலை மட்டங்களில் முதல் மூன்று இடத்தினை பிடித்துக்கொண்ட அதிபர் மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்களிடம் வெற்றி கிண்ணங்களையும் வழங்கி வைத்தார்.

இதேவேளை ஆளுநரை கௌரவித்து மாகாண பணிப்பாளர் நினைவுச் சின்னமொன்றை வழங்கியதுடன் திருக்கோவில் வலயக் கல்விப்பணிப்பாளர் வை. ஜெயச்சந்திரன் பொன்னாடை போர்த்தி கௌரவித்து விசேட நினைவு பரிசினையும் வழங்கி வைத்தார்.

இங்கு ஆளுநர் உரையாற்றுகையில், இனபேதம், மதபேதம் இல்லாது சிறந்த நாட்டிற்கு தேவையான பிரஜையாக மாணவர்கள் வரவேண்டும் எனவும் ​கேட்டுக் கொண்டார்.

வாச்சிக்குடா விஷேட, மண்டூர் குறூப் நிருபர்கள்

Tue, 07/09/2019 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக