சிரியாவில் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

4 பொதுமக்கள் பலி

சிரிய நகரங்களான டமஸ்கஸ் மற்றும் ஹோம்ஸுக்கு அருகில் இடம்பெற்ற இஸ்ரேலின் ஏவுகணை தாக்குதல்களில் 4 பொதுமக்கள் கொல்லப்பட்டு மேலும் 21 பேர் காயமடைந்திருப்பதாக சிரிய அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஏவுகணை வீசிய இஸ்ரேல் போர் விமானங்கள் மீது சிரிய இராணுவம் பதில் தாக்குதல் நடத்தியதாகவும் சானா செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஞாயிறு நள்ளிரவு வேளையில் லெமனான் வான் பகுதியில் இருந்து இராணுவத் தளங்கள் மீது இஸ்ரேல் விமானங்கள் தாக்குதல் நடத்தியதாகவும் அந்த செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.

எனினும் இது பற்றி இஸ்ரேல் இராணுவம் எந்த பதிலும் அளிக்கவில்லை. சிரியா மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் அதற்கு இஸ்ரேலின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி வருகிறது.

சிரியாவில் இருக்கும் லெபனானின் ஹிஸ்புல்லாஹ் அமைப்பு மற்றும் ஈரான் தளங்களை இலக்கு வைத்தே பெரும்பாலும் இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தி வருகிறது. தனது எதிரியான ஈரான் சிரியாவில் நிலைகொள்வதை அனுமதிக்காது என்று இஸ்ரேல் கூறி வருகிறது.

இந்நிலையில் ஈரானிய படையுடன் தொடர்புபட்ட தளம் ஒன்றின் மீதே இஸ்ரேல் தாக்குதல் நடத்தி இருப்பதாக மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.

ஹோம்ஸ் பகுதியில் இருந்து ஈரானின் ஆய்வு மையம் மற்றும் இராணுவ விமானநிலையமும் ஹிஸ்புல்லா தளமும் தாக்குதல்களுக்கு இலக்காகி உள்ளன. டமஸ்கஸுக்கு அருகிலும் ஈரானிய இலக்குகள் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதில் ஈரானிய புரட்சிப் படை மற்றும் ஹிஸ்புல்லா உறுப்பினர்கள் காயமடைந்திருப்பதாக கண்காணிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இஸ்ரேலின் ஆத்துரமூட்டும் செயலால் தெற்கு டமஸ்கஸின் சஹனாயா பகுதியில் ஒரு சிசு உட்பட நான்கு பொதுமக்கள் கொல்லப்பட்டதாக சிரிய அரச தொலைக்காட்சியான ‘அல் இக்பரியா’ குறிப்பிட்டுள்ளது.

Tue, 07/02/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை