பூஜித், ஹேமசிறிக்கு பிணை; வரலாற்றில் இடம்பிடிக்கும் தீர்ப்பு

உயிர்த்த ஞாயிறு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப் பட்டிருந்த முன்னாள் பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தரவையும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ வையும்

பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் நேற்றுமுன்தினம் விடுத்துள்ள தீர்ப்பு இலங்கை வரலாற்றில் இடம்பிடிக்குமென ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிக்கா பிரேமச்சந்திர நேற்று தெரிவித்தார்.

எவரையும் திருப்திபடுத்தும் அல்லது சந்தோஷப்படுத்தும் நோக்கில் நீதிமன்றத்தால் தீர்ப்பை முன்வைக்க முடியாது. வெளிநாடுகளில் இவ்வாறுதான் நீதிமன்ற தீர்ப்புகள் அமையும். இலங்கையிலும் இவ்வாறான தீர்ப்புகள் வெளியாவது நீதித்துறையின் சுதந்திரத்தை உறுதி செய்துள்ளதென்றும் அவர் கூறினார்.

அலரிமாளிகையில் நேற்று (10) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது-

எந்தவொரு அரசியல் நிர்ப்பந்தத்துக்கும் கட்டுப்படாத வகையில் சுயாதீனமான தீர்ப்பை கொழும்பு பிரதம நீதவான் வழங்கியுள்ளார். நிறைவேற்று அதிகாரத்துக்கு கட்டுப்படாத சுயாதீனமான தீர்ப்பை நீதிமன்றம் வௌியிட்டுள் ளது. நீதிமன்ற தீர்ப்பினால் எவரையும் சந்தோஷப்படுத்த முடியாது என்பதையும் இத்தீர்ப்பு உறுதிசெய்துள்ளது.

கடந்த அரசாங்கத்தில் நீதிமன்ற தீர்ப்புகள் தொலைபேசியிலேயே தீர்மானிக்கப்பட்டன. தங்களுக்கு சார்பான தீர்ப்பு வழங்காததற்காக பிரதம நீதியரசரே பதவி விலக்கப்பட்டார். இன்று இந்நிலை மாறியுள்ளது. அதனையிட்டு நாம் பெருமையடைகின்றோம்.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பான வழக்கு தொடர்ந்தும் நடைமுறையிலுள்ளது. இதனால் யார் குற்றவாளிகள் என்பது குறித்து நான் கூற விரும்பவில்லை. படைகளின் தளபதி என்ற வகையிலும் சட்டம் ஒழுங்கு அமைச்சர் என்ற வகையிலும் ஜனாதிபதிக்கும் இவ்விடயத்தில் அதிக பொறுப்பு உண்டு என்றும் அவர் தெரிவித்தார்.

லக்ஷ்மி பரசுராமன்

Thu, 07/11/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை