மட்டு. உறுகாமம் சுபைர் ஹாஜியார் பாடசாலையில் குடிநீர் விநியோகம்

மட்டக்களப்பு- உறுகாமம் சுபைர் ஹாஜியார் பாடசாலை மற்றும் பொதுமக்களுக்கான குடிநீர் விநியோகம் திங்கட்கிழமை (08) ஆரம்பிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் ​ உமர்மௌலானா இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

அண்மைக்காலமாக நிலவிவரும் கடும்வரட்சி காரணமாக பாடசாலை மாணவர்கள் மற்றும் பிரதேச மக்களும் குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் எதிர்நோக்கியுள்ள சிரமங்களைக் கருத்திற்கொண்டு நெதர்லாந்து நாட்டு தனவந்தர்களின் நிதியுதவியுடன் இக்குடிநீர் விநியோகத்திட்டம் அமைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் சமாதானம், சமூக ஒருங்கிணைப்பு மற்றும் இப்பாடசாலை மேம்பாட்டு உத்தியோகத்தருமான நாஸரின் முயற்சியின் பயனாக இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு சுமார் 75 வருடங்களைக் கடந்துவிட்டபோதிலும் மாணவர்கள் குடிநீரைப் பெற்றுக்கொள்வதற்கு முறையான திட்டம் அமுல்செய்யப்படாததால் காலத்திற்குக்காலம் ஏற்படும் வரட்சியின்போது மாணவர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிகழ்வில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் சமாதானம், சமூக ஒருங்கிணைப்பு விடயம் மற்றும் இப்பாடசாலை மேம்பாட்டு உத்தியோகத்தர் நாஸர் உள்ளிட்ட கல்வியதிகாரிகள், பிரதேச சமய, சமூக முக்கியஸ்தர்கள் பொதுமக்கள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.

(ஏறாவூர் குறூப் நிருபர்)

Thu, 07/11/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை