கட்டுமானப்பணிகளை நிறுத்த மாவட்ட செயலருக்கு பணிப்பு

கன்னியா வெந்நீரூற்று விவகாரம்;

 தொல்பொருள் திணைக்களத்திற்கு உத்தரவிடவில்லையென ஜனாதிபதி தெரிவிப்பு

 தமிழ்ப் பிரதிநிதிகளை சந்தித்துப்பேச ஜனாதிபதி இணக்கம்

கன்னியாவில் விகாரை கட்டும்படி தொல்பொருள் திணைக்களத்திற்கு எந்தப் பணிப்புரையும் வழங்கப்படவில்லையென்று ஜனாதிபதி தெரிவித்ததையடுத்து, விகாரை கட்டுமானப் பணிகளை இடைநிறுத்தி வைக்குமாறு அமைச்சர் மனோ கணேசன், திருகோணமலை மாவட்டச் செயலாளருக்குப் பணிப்புரை வழங்கியுள்ளார்.

கன்னியா வெந்நீரூற்றுப் பிள்ளையார் ஆலய விவகாரமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் அமைச்சர் மனோ கணேசன் நேற்று (17) உரையாடினார். இதன்போது அங்கு விகாரை கட்டும்படி தொல்பொருளாராய்ச்சி திணைக்களத்திற்குக் கடிதம் அனுப்புமாறு தனது இணைப்புச் செயலாளருக்குத் தான் கூறவில்லையென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அவ்வாறு கடிதம் அனுப்பப்பட்டிருந்தால், அதுபற்றி விசாரணைசெய்வதாகவும் ஜனாதிபதி தம்மிடம் கூறியதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

அதேநேரம், கன்னியா விவகாரமாகத் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் தூதுக்குழுவைச் சந்தித்துப் பேசவும் ஜனாதிபதி இணக்கம் தெரிவித்ததாகக் கூறிய அமைச்சர் மனோ கணேசன், அதற்கான திகதி விரைவில் தீர்மானிக்கப்பட்டு அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இதனையடுத்து, கன்னியா விவகாரம் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் வரை, எந்தவிதமான விகாரை கட்டுமானப் பணிக்கும் கன்னியாவில் இடமளிக்க வேண்டாம் என்று திருகோணமலை மாவட்டச் செயலாளர் புஷ்பகுமாரவை அழைத்துப் பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சர் கூறினார்.

திருகோணமலை கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் ஆலயத்தை உடைத்து அங்கு விகாரை கட்டுவதற்கு தொல்பொருள் திணைக்களமும் பௌத்த பிக்குகளும் நடவடிக்ைக எடுப்பதாகக் கூறி, நேற்று முன்தினம் அங்குத் தமிழ் மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழர்களின் மரபுரிமை பாதுகாக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தி நடத்தப்பட்ட அந்த ஆர்ப்பாட்டத்தின்போது இருதரப்புக்கும் இடையில் ஏற்பட்ட வாதப்பிரதிவாதங்களால், கன்னியாவில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அங்கு பொலிஸாரும் இராணுவத்தினரும் வரவழைக்கப்பட்டு அமைதி நிலைநாட்டப்பட்டது.

கன்னியாவில் சதுர வடிவில் ஏழு வெந்நீரூற்றுக் கிணறுகள் காணப்படுகின்றன. மூன்று முதல் நான்கடி வரை ஆழமான இந்தக் கிணறுகளின் வெப்ப நிலை, ஒன்றுக்ெகான்று மாறுபட்டதாக இருக்கும். பத்துப் பதினைந்து வாளிகள் அள்ளியதும் அவற்றில் நீர் இல்லாமல் போய் மீண்டும் ஊறும்.

இந்த வெந்நீரூற்றுக் கிணறுகள் இராமாயண யுகத்தில் இராவணன் தனது தாய்க்காக அமைத்ததாக வரலாறுகள் கூறுகின்றன. அங்கு பிரதேச சபை காட்சிப்படுத்தியுள்ள அறிவிப்புப் பலகையின்படி, அந்தக் கிணறுகள் இந்துக் கலாசாரத்துடன் தொடர்புபட்டவை எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலதிக பணிப்பாளர் பாலித்த வீரசிங்க,

இதேவேளை இவ்விடயம் தொடர்பில் தொல்பொருளியல் திணைக்களத்துடன் தொடர்பு கொண்டு கேட்டபோது அதன் மேலதிக பணிப்பாளர் பாளித்த வீரசிங்க,

"எமது திணைக்களம் தொல்பொருட்களை சமயம் மற்றும் கலாசார ரீதியாக பிரித்துப் பார்ப்பதில்லை. அனைத்து தொல்பொருட்களையும் பாதுகாப்பதே எமது நோக்கம்," என தெரிவித்தார்.

"தொல்பொருட்களை பாதுகாப்பதற்காக பட்டியலிடப்பட்டுள்ள இடங்களில் கன்னியா ஒரு இடம் மட்டுமேயாகும். நாம் இதுபோன்று ஜேத்தவனராமைய விகாரை, அபயகிரி விகாரை மற்றும் கோணேஸ்வரம் ஆலயத்தையும் புனரமைப்பு செய்யவுள்ளோம். கன்னியா வெந்நீரூற்றுப் பிரதேசத்தில் பாதுகாப்பு பணிகளை முன்னெடுத்தபோது அங்கிருந்த சில கொங்கிறீட் கற்களை அகற்ற வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் ஆராய்வதற்காக திணைக்களத்தின் மூன்று அதிகாரிகள் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இக்குழு இன்னும் சில தினங்களுள் சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிடும்," என்றும் கூறினார். (வி)

 

லக்ஷ்மி பரசுராமன்

 

Thu, 07/18/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை