ஹொங்கொங் ஆர்ப்பாட்டத்தின் மீது முகமூடி அணிந்த கும்பல் தாக்குதல்

ஹொங்கொங்கில் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்பவர்களை முகமூடி அணிந்த கும்பல் தாக்கிய சம்பவத்தில் குறைந்தது 45 பேர் காயமடைந்துள்ளனர். ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

வெள்ளை டி சர்ட்டை அணிந்திருந்த அந்த ஆடவர்கள் தடிகளைக் கொண்டு யுவென் லொங் வட்டாரத்தில் அமைந்திருந்த ரயில் நிலையத்தில் கடந்த ஞாயிறு இரவு தாக்குதல் நடத்தினர்.

ரயில் நிலையத்திலிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களும் செய்தியாளர்களும் தாக்கப்பட்டதில் பலர் இரத்தம் சிந்த நேரிட்டது.

கறுப்பு ஆடை அணிந்திருந்த பயணிகளைக் குறிவைத்து அந்தக் கும்பல் தாக்கியதுபோல் தோன்றுவதாகச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

ஹொங்கொங்கிலுள்ள சீனப் பிரதிநிதியின் அலுவலகத்தை சில ஆயிரம் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஞாயிற்றுக்கிழமை சுற்றி வளைத்த சம்பவம் நடந்த பின்னர் முகமூடிக்காரர்களின் தாக்குதல் இடம்பெற்றது.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதாக பொலிஸார் நேற்று குறிப்பிட்டபோதும் எவரும் கைது செய்யப்பட்டிருக்கவில்லை.

ஹொங்கொங்கில் குறிப்பிட்ட குற்றங்கள் தொடர்பான சந்தேக நபரை சீனாவிடம் ஒப்படைக்கும் சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே முதலில் போராட்டம் ஆரம்பமானது. பின் இந்த போராட்டம் வேறு கோரிக்கைகளை முன்வைத்தும் தொடர்ந்து நடந்து வருகிறது.

ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த போராட்டத்தில் போராட்டம் நடந்த பகுதியில், “அமைதி போராட்டம் பயனற்றது என்று எங்களுக்கு உணர்த்தி வருகிறீர்கள்” என்ற வாசகம் காணப்பட்டது.

பிரிட்டனின் காலனி நாடாக இருந்த ஹொங்கொங், 1997ஆம் ஆண்டு சீனாவிடம் ஒப்படைக்கப்பட்ட பின் ஒரு தேசம், இரண்டு அமைப்பு முறைகளை கொண்டு இயங்கி வருகிறது. ஹொங்கொங்கிற்கு என்று தனிச்சட்டம் உள்ளது. சீன மக்களுக்கு கிடைக்காத ஜனநாயக சுதந்திரம் ஹொங்கொங் மக்களுக்கு உள்ளது.

Tue, 07/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை