சஹ்ரானுக்கு ஐஎஸ்ஸுடன் நேரடி தொடர்பு இல்லை

குற்றப் புலனாய்வுப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் ரவி செனவிரட்ண தெரிவுக்குழுவில் சாட்சியம்

இதுவரை போதிய சாட்சியங்கள் கிடையாது

மூன்றாந்தரப்பினூடாகவே அவர் தொடர்பு

தாக்குதல்தாரிகள் உள்நாட்டிலேயே ஆயுதப் பயிற்சி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை நடத்திய சஹ்ரான் குழுவினர் ஐ.எஸ்.ஐ.எஸ்ஸுடன் நேரடித் தொடர்புகளைக் கொண்டிருந்தமைக்கான சாட்சியங்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என குற்றப் புலனாய்வுப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் ரவி செனவிரட்ண தெரிவித்தார்.

குண்டுத் தாக்குதல்களை நடத்திய குழுவினர் உள்நாட்டிலேயே ஆயுதப் பயிற்சிகளைப் பெற்றுள்ளர். இந்நிலையில் இவர்களின் வெளி நாட்டுத் தொடர்புகள் பற்றி தொடர்ந்தும் விசாரணைகள் நடத்தப்படவேண்டியிருப்பதாகவும் அவர் கூறினார்.

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல்கள் குறித்து விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட விசேட பாராளுமன்ற தெரிவுக்குழுவின் முன்னிலையில் நேற்று சாட்சியமளிக்கும்போதே அவர் இதனைக் கூறினார்.

குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்ட பின்னர் இந்தோனேஷியாவில் உள்ள மூன்றாவது தரப்பினர் ஊடாக ஐ.எஸ்.ஐ.எஸ்

அமைப்பினரைத் தொடர்புகொண்டு, குண்டுத் தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிரு ப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

“தாக்குதலின் பின்னர் இந்தோனேஷியாவிலுள்ள

மூன்றாவது தரப்பின் ஊடாக ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினரைத் தொடர்பு கொண்டு குண்டுத் தாக்குதல்களைப் பொறுப்பேற்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். இது தவிர ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கும் சஹ்ரான் குழுவினருக்கும் நேரடியான தொடர்புகள் இருப்பதாக எந்தவிதமான சாட்சியங்களும் இதுவரை எமக்குக் கிடைக்க வில் லை.எனினும் ஐ.எஸ்.ஐ.எஸ்ஸின் நிலைப்பாட் டைக் கொண்டிருந்தனர் என்பது தெளிவாக உள்ளது.இருந்தாலும் ஐ.எஸ்.ஐ. எஸ்ஸுடன் நேரடியாக தொடர்புகள் இருந்தமை பற்றி தொடர்ந்தும் விசாரணைகள் நடத்தப்பட வேண்டியுள்ளது” என்றார்.

இவர்கள் எமது நாட்டுக்குள்ளேயே பயிற்சிகளைப் பெற்றுள்ளனர். வெளிநாட்டு தொடர்புகள் இருக்கின்றனவா? என்பது தொடர்ந்தும் விசாரணை நடத்தவேண்டியுள்ளது எனவும் குறிப்பிட்டார்.

வவுணதீவில் இரண்டு பொலிஸார் கொல்லப்பட்ட சம்பவத்துடன் எல்.ரி.ரி.ஈயுடன் தொடர்புபட்டவர்களே சம்பந்தப்பட்டிருப்பார்கள் என தாம் ஆரம்பத்தில் சந்தேகித்திருந்தபோதும், பின்னரே சஹ்ரானின் தொடர்பு புலனாகியது.

மாவனல்லை சிலையுடைப்பு விவகாரம் மற்றும் அதன் தொடர்ச்சியாக வண்ணாத்திவில்லு பிரதேசத்தில் வெடிபொருட்கள் மீட்கப்பட்டமை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்போது, தாம் எதிர்பார்த்ததைவிட அவர்கள் அடிப்படைவாதத்தின் பக்கம் மோசமாக உள்ளனர் என்பதை உணர்ந்துகொண்டிருந்தோம். இவை தொடர்பாக நடத்திய விசாரணைகளிலேயே சஹ்ரானையும் ஒரு சந்தேகநபராகக் கொண்டு தேடத்தொடங்கியிருந்தோம். அவர் இருப்பதாகத் தகவல் கிடைத்த சகல இடங்களுக்கும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் குழுவினரை அனுப்பித் தேடியிருந்தோம். எனினும் அவரைக் கண்டுபிடிக்க முடிந்திருக்கவில்லை என்றார்.

அதேநேரம், தாஜ் சமுத்திரா ஹோட்டலுக்கு வந்திருந்த குண்டுதாரி குண்டை வெடிக்க வைப்பதற்கு இரண்டு தடவைகள் முயற்சித்தமை அங்கிருந்து பெறப்பட்ட வீடியோ காட்சிகளின் ஊடாகத் தெரிந்திருப்பதாகவும் அவர் கூறினார். அன்றையதினம் ஹோட்டலிலிருந்த விருந்தினர்கள் பற்றிய தகவல்களும் விசாரணைக்குட்படுத்தப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

அரசாங்க புலனாய்வு சேவையால் ஏப்ரல் 9ஆம் திகதி அனுப்பப்பட்ட புலனாய்வுத் தகவல் அடங்கிய கடிதம் தனக்குக் கிடைத்திருந்ததுடன், அக்கடிதம் தொடர்பில் பாதுகாப்புத் தரப்பினர் எடுத்த நடவடிக்கை திருப்திதரும் வகையில் அமைந்திருக்கவில்லையென்றும் அவர் கூறினார்.

பிற்பகல் 1 மணியளவில் இவரின் சாட்சியங்கள் ஆரம்பமாகின. சுமார் 1 மணி நேரத்துக்கு மேல் இவரிடம் சாட்சியங்கள் பெறப்பட்டதுடன், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான சில விடயங்களை அவர், தெரிவுக்குழுவின் உறுப்பினர்களுக்குத் தெரியப்படுத்தியிருந்தார்.

எனினும் ஊடகவியலாளர்களுக்கு இதன்போது அனுமதி வழங்கப்படவில்லை.

ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்

 

Thu, 07/25/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை