எதிர்காலத்தில் எழக்கூடிய காணி பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி

வாழ்வதற்கும், வர்த்தகம் செய்யவும், தொழில் செய்யவும் ஒவ்வொருவருக்கும் காணி

எதிர்காலத்தில் எழக்கூடிய காணிப் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ள தெனப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாவலப்பிட்டியில் தெரிவித்தார். 

வழங்கப்படும் காணியில் வாழ்வதற்கு, தொழில் செய்வதற்கு உரிமை இருக்கிறது என்பது அரசாங்கம் வழங்கும் உறுதி பத்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது என்றும் பிரதமர் கூறினார்.

நாவலப்பிட்டி பகுதியில் வசிக்கும் பல ஆண்டுகள் காணி உறுதி பத்திரமில்லாமல் இருந்த சுமார் 1,200பேருக்கு ‘ரன் பிம’ எனும் காணி உறுதி பத்திரம் வழங்கும் நிகழ்வு (13) நாவலப்பிட்டி பவ்வாகம பகுதியில் நடைபெற்றது. 

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

இந் நிகழ்வின் போது காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக்க, பெருந்தெருக்கள் மற்றும் உயர் கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் லக்கி ஜயவர்தன, நாவலப்பிட்டி நகர சபை தலைவர் மற்றும் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர். 

அவர் மேலும் தெரிவித்ததாவது, 

சமூகத்தில் சிறியவருக்கும் உரிமையை வழங்கும் வேலைத்திட்டத்தின் ஊடாகவே இதனை முன்னெடுத்துள்ளோம். 

ஒரு புறத்தில் ‘எண்டர்பிரைசஸ் ஸ்ரீலங்கா’ என்ற வேலைத்திட்டத்தையும் நடைமுறைப்படுத்தியுள்ளோம். இதனூடாக சிறு வியாபாரங்கள் ஊக்குவிக்கப்படுகின்றன. இவ்வாறான வர்த்தக பொருளாதார முறைமையை உருவாக்கிய பெறுமை ஐக்கிய தேசிய கட்சியையே சாரும். 

குறிப்பாக ஜே.ஆர்.ஜெயவர்தனவின் எண்ணக்கருவிற்கமையவே இதனை முன்னெடுத்துள்ளோம். அடுத்ததாக காணி உரிமை பத்திரங்களை வழங்குவதே எமது நோக்கம். இன்று அரசாங்கத்திற்குச் சொந்தமான இடத்தில் எவரேனும் பத்து வருடங்களுக்கு மேல் வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுத்தால் அந்த இடம் அவர்களுக்கே சொந்தமாக்கப்படும். இதற்கான உறுதிப் பத்திரமும் வழங்கப்படும். இதனூடாக ஒவ்வொருவருக்கும் சொந்த இடம் வழங்கப்படுகின்றது. 

இவ்வாறு 20பேர்ச் காணியாக இருந்தாலும் அதற்கான உறுதிப்பத்திரத்தை நாம் வழங்குவோம். முன்னர் முதலாளி வர்க்கத்தினருக்கு உரிமைகள் இருந்தன. ஆனால் சாதாரண மக்களுக்கு அந்த சந்தர்ப்பம் இருக்கவில்லை. அந்த முறைமையை மாற்றவே இந்த செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றது. இந்த உறுதிப்பத்திரங்கள் வழங்கிய பின்னர் அதற்கான சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

ஹற்றன் சுழற்சி நிருபர்

Sun, 07/14/2019 - 14:54


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை