பிரிட்டிஷ் பிரதமராக பொரிஸ் ஜோன்சன் இன்று பதவியேற்பு

பிரிட்டன் கன்சர்வேர்ட்டிவ் கட்சியின் தலைவராக வெற்றி பெற்ற முன்னாள் லண்டன் நகர மேயர் பொரிஸ் ஜோன்ஸன் அந்நாட்டின் அடுத்த பிரதமராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகிக் கொள்ளும் பிரெக்சிட் விவகாரத்தில் கடும் நிலைப்பாட்டைக் கொண்டிருக்கும் ஜோன்ஸன் ஆளும் கட்சியின் தலைமை பதவிக்காக நேற்று நடைபெற்ற வாக்கெடுப்பில் வெளிவிவகார அமைச்சர் ஜெர்மி ஹண்டை தோற்கடித்தார். இதன்போது சுமார் 160,000 கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர்கள் வாக்களிப்பில் பங்கேற்றனர். பிரதமர் பதவிக்கான போட்டியில் ஜெர்மி ஹண்ட் 46, 656 வாக்குகள் பெற்ற நிலையில், பொரிஸ் ஜோன்சன் 92,153 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதன்படி அவர் இன்று பிரிட்டன் பிரதமராக பதவி ஏற்கவுள்ளார். ஒப்பந்தம் ஒன்று இடம்பெறாவிட்டாலும் திட்டமிடப்பட்ட எதிர்வரும் ஒக்டோபர் 31 ஆம் திகதி காலக்கெடுவில் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகிவிடும் என்று ஜோன்ஸன் உறுதியாக குறிப்பிட்டுள்ளார்.

எனினும், உடன்பாடு இன்றி ‘பிரெக்சிட்டை’ முன்னெடுத்தால் தாம் பதவி விலகுவதாக கன்சர்வேடிவ் அமைச்சர்கள் பலரும் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருப்பதோடு அப்படியான ஒரு நிலை பிரிட்டன் பொருளாதாரத்தில் கடும் வீழ்ச்சியை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது. பிரெக்சிட் விவகாரம் பிரிட்டனின் இரு கன்சர்வேடிவ் பிரதமர்களை பதவி வலகச் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரிட்டனின் தற்போதைய பிரதமர் தெரேசா மே, இன்று பெக்கிங்ஹாம் அரண்மனைக்கு சென்று மகாராணி எலிசபத்தை சந்தித்த பின் பதவியில் இருந்து விடைபெறவிருப்பதோடு, இதன்போது 55 வயதான ஜோன்சனை, மகாராணி உத்தியோகபூர்வமாகப் பிரதமராக நியமிக்கவுள்ளார்.

Wed, 07/24/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை