ரணில், கரு, பொன்சேகாவின் பெயர்களே முன்னிலையில்

வேறு எவரும் கவனிக்கப்படவில்லை

ஐக்கிய தேசியக் கட்சியின் ஒற்றுமையை சீர்குலைக்க முற்படும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுக்கும் ஐ.தே.கவில் அவருக்கு ஆதரவாகவுள்ள குழுவுக்கும் கட்சிக்குள் எந்த இடமும் கிடையாது. நாட்டை நேசிக்கும் மற்றும் நாட்டை சர்வதேசத்திற்கு கொண்டுசெல்லும் தலைவரையே ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவோம் என்று அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஜனாதிபதி வேட்பாளர் பெயர் பட்டியலில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கருஜயசூரிய மற்றும் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா ஆகியோரின் பெயர்களே முன்னிலையில் உள்ளது. வேறு நபர்களின் பெயர்கள் குறித்து கட்சியில் கலந்துரையாடப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

நேற்றுமுன்தினம் காதிர்காமத்தில் வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

ஐக்கிய தேசியக் கட்சியின் ஒற்றுமையை சீர்குலைக்கும் தேவை சிலருக்கு தேவை ஏற்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா எமது கட்சியினுள் தலையீடு செய்ய முடியுமென நினைக்கிறார். ஐ.தே.கவில் தலையீடு செய்து இரண்டு, மூன்று பேரை தமக்கு ஆதரவாக்கி கட்சியின் ஒற்றுமையை சீர்குலைக்க முடியுமென அவர் எண்ணுகிறார். எமது கட்சியினுள் சந்திரிக்காவுக்கு தலையீடு செய்ய ஒருபோதும் அனுமதியளிக்க மாட்டோம்.

சந்திரிகா, அத்தனகல தொகுதியின் அமைப்பாளராகவுள்ள போதிலும் அவரது ஆசனத்தைகூட பெற்றிபெற முடியாத நிலையே காணப்படுகிறது. ஆசனத்தைகூட வெற்றிபெற முடியாதவருடன் இணைந்து கட்சியை முன்னோக்கிக் கொண்டுசெல்ல முற்படுவது விளையாட்டுத்தனமானது. ஐ.தே.கவை இல்லாதொழிக்க நினைக்கும் சந்திரிகாவும், அவருக்கு சார்பாக ஐ.தே.கவினுள் உள்ள குழுவுக்கும் நாம் இடமளிக்க மாட்டோம்.

ஜனாதிபதித் தேர்தலில் ஐ.தே.க சார்பில் களமிறக்கும் வேட்பாளரை உரிய நேரத்தில் நாம் அறிவிப்போம். இவர்தான் வேட்பாளரென. உறுதியாக இதுவரை நாம் எவரையும் நியமிக்கவில்லை. ரணில் விக்கிரமசிங்க, கருஜயசூரிய, சரத் பொன்சேகா உள்ளிட்ட பிரபலமானவர்கள் எமது கட்சியில் உள்ளனர். வேறு நபர்களின் பெயர்கள் கூறப்பட்டாலும் அது கட்சியின் ஏகமான தீர்மானம் அல்ல. நாட்டை நேசிக்கும், முன்னோக்கி சிந்திக்கும், நாட்டை சர்வதேசத்திற்கு கொண்டுசெல்லும் ஒரு தலைவரையே நாம் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவோம்.

இது எமது தனித் தீர்மானமல்ல. எமது நாட்டை சர்வதேசத்திற்கு கொண்டுசெல்ல வேண்டும். நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டும்.

வேலையின்மைக்கு தீர்வளிக்க வேண்டும். அவை தொடர்பில் அனுபவமுள்ளவர்தான் ஜனாதிபதியாக வேண்டும் என்றார்.

ஜனாதிபதி மரண தண்டனையை வழங்க தீர்மானித்துள்ளமை தொடர்பில் ஐ.தே.கவின் சிலர் வெளியிட்டுள்ள கருத்துகள் தொடர்பில் கேள்வியெழுப்பிய ஊடகவியலாளர்களுக்கு பதிலளித்த அமைச்சர், ஐ.தே.கவில் ஒரு தலைவர்தான் உள்ளார்.

அவர் உட்பட ஐ.தே.கவினர் மரண தண்டனைக்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். சிங்கள பௌத்த நாட்டுக்கு அவ்வாறானதொரு விடயம் பொருத்தமற்றதாகும் என்றார்.

Mon, 07/15/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை