ஹொங்கொங் பேரணி மீது கண்ணீர் புகை பிரயோகம்

ஹொங்கொங்கில் கலவரத் தடுப்புப் பொலிஸார், சீன எல்லையில் உள்ள நகரில் பேரணி நடத்திய ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப் புகைப்பிரயோகம் மேற்கொண்டனர்.

கடந்த வாரம் ஜனநாயக ஆதரவுப் போராட்டக்காரர்களைத் தாக்கியது குற்றக் கும்பலைச் சேர்ந்தோர் என்ற சந்தேகம் நிலவும் வேளையில் நேற்று முன்தினம் மீண்டும் பேரணி இடம்பெற்றது.

பொலிஸார் அதனைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் ஆர்ப்பாட்டக்காரர்கள் சினத்தை வெளிப்படுத்தினர். பாதுகாப்பைக் காரணங்காட்டி யுவான் லாங் வட்டாரத்தில் பேரணி நடத்த பொலிஸார் அனுமதி மறுத்தது.

ஆனால் சில ஆயிரம் பேர் கூடி பொலிஸாருக்கு எதிராக முழக்கமிட்டனர். பொலிஸ் அதிகாரிகள் சிலர் குற்றச்செயல் கும்பலுக்கு உடந்தையாகச் செயல்படுவதாய் ஆர்ப்பாட்டக்காரர்கள் குறைகூறினர்.

கடந்த வாரச் சம்பவம் தொடர்பில் அதிகாரபூர்வ விசாரணைக்கு அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

ஏழு வாரங்களாக அரசுக்கு எதிரான, ஜனநாயகத்திற்கு ஆதரவான போராட்டங்கள் பல ஹொங்கொங்கில் நடைபெற்றுள்ளன.

குற்றவாளிகளை சீனாவிடம் ஒப்படைக்கக்கூடிய சட்டத்திருத்தத்தால் அங்கு ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பமாகின. இந்த போராட்டங்களுக்கு பின்னர், இந்த சட்டத்திருத்தத்தை அரசு நிறுத்தி வைத்துள்ளது. ஆனால் பொலிஸாரின் வன்முறை, உள்நாட்டு சீர்திருத்தம் மற்றும் ஹொங்கொங்கின் நிர்வாக தலைவர் கேரி லெம் பதவி விலகல் ஆகியவற்றை ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரி வருகின்றனர்.

Mon, 07/29/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை