யுரேனிய செறிவூட்டல் வரம்பை மீறிய ஈரான்

அணுகுண்டு தயாரிக்கப் பயன்படும் செறிவூட்டப்பட்ட யுரேனிய கையிருப்பை ஈரான் அதிகரித்துள்ள நிலையில், நெருப்புடன் விளையாட வேண்டாம் என அந்நாட்டை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எச்சரித்துள்ளார்.

அமெரிக்கா விதித்த தடைகளை மீறி எண்ணெய் வர்த்தகத்தை மேற்கொள்ள ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் உதவவில்லை என்றால் ஒப்பந்தப்படி அனுமதிக்கப்பட்ட செறிவூட்டப்பட்ட யுரேனிய கையிருப்பை அதிகரிப்பதைத் தவிர வேறுவழியில்லை என்றும் ஈரான் கூறியிருந்தது.

அதன்படி, 300 கிலோகிராம் என்ற அளவைத் தாண்டி செறிவூட்டப்பட்ட யுரேனிய கையிருப்பை அதிகரித்திருப்பதாக ஈரான் அறிவித்துள்ளது. ஒப்பந்தத்தில் இருந்து ஈரான் மேலும் மீறிச்செல்ல வேண்டாம் என பிரிட்டன் அறிவுறுத்தியுள்ளது. அமெரிக்கா கொடுத்த நெருக்கடியின் விளைவாகவே ஒப்பந்தம் சிதையும் நிலை ஏற்பட்டிருப்பதாக ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது.

இதனிடையே, ஈரானின் நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ஈரான் நெருப்புடன் விளையாடுவதாகவும், என்ன செய்கிறோம் என தெரிந்துதான் ஈரான் இதைச் செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தனது இரண்டு ஆளில்லா விமானங்களை சுட்டுவீழ்த்தியது மட்டுமின்றி, அண்மையில் நடந்த எண்ணெய் கப்பல்கள் மீதான தாக்குதலுக்கும் ஈரானே காரணம் என்று அமெரிக்கா தெரிவித்து வரும் பரபரப்பான சூழலில் இந்த செய்தி வெளிவந்துள்ளது.

அணு மின்சார உற்பத்தி செய்யும்போது கிடைக்கின்ற செறிவூட்டிய யுரேனியத்தை சேமித்து வைத்துகொண்டால் ஈரான் அணு ஆயுதங்களை செய்வதற்கு பயன்படுத்திக்கொள்ள முடியும்.

செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஈரான் வெளிநாடுகளுக்கு விற்பதன் மூலம், அணு மின்சாரம் தயாரிப்பதை ஈரான் தொடர்கின்ற வேளையில் அது அணு ஆயுதங்களை தயாரிக்காமல் இருப்பதையும் உறுதி செய்துகொள்ள முடியும்.

Wed, 07/03/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை