மீண்டும் உச்சமன்று சென்றாலும் அதே பதில்தான் கிடைக்கும்

ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பில் உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் மீண்டும் பதவிக்காலத்தை வினவச் சென்றாலும் அதே பதிலையே உச்ச நீதிமன்றம் வழங்கும் என்று சபை முதல்வர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். கண்டியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

தனது பதவிக்காலம் தொடர்பாக

உச்ச நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை கோர ஜனாதிபதி தயாராவதாக தெரிவிக்கப்படும் செய்தி குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

இலங்கையானது சிங்கள பௌத்த நாடு என்பதை போன்று ஏனைய இன,மத மக்களும் ஒற்றுமையாக வாழும் நாடாகும். சமகால அரசு அனைத்து இன மக்களுக்கும் சுதந்திரத்தையும், சந்தர்ப்பத்தையும் வழங்கி செயற்படுகிறது. வரலாற்றை புரட்டிப்பார்த்தால் இது தெளிவாகும் , அநுராதபுர யுகத்திலிருந்து கண்டி மன்னராட்சி யுகம்வரை பௌத்த மதத்திற்கே முன்னுரிமையளிக்கப்பட்டுள்ளது.

முடிசூடுவதற்கும், ஆட்சியை கொண்டுசெல்வதற்கும் பௌத்த மதம் முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்பட்டது. இனத்தைவிட மதத்திற்கே முன்னுரிமை பெற்றுக்கொடுக்கப்பட்டிருந்தது. அதேபோன்று அனைத்தின மக்களும் சமமாக நடாத்தப்பட்டனர். நாங்கள் அன்று பாடசாலைகளில் கற்ற வரலாறுகள் இன்று கற்பிக்கப்படுவதில்லை. அது பாரிய குறைபாடாகும்.

ஒல்லாந்து நாட்டவர்களிடமிருந்து முஸ்லிம் மக்களை காப்பாற்றி கிழக்கு மாகாணத்தில் குடியமர்த்தியது சேனாரத் மன்னர்தான் என்பது எமது பிள்ளைகளுக்குத் தெரியாது. அவ்வாறுதான் எமது மன்னர்கள் நாட்டின் அனைத்து மக்களையும் பாதுகாத்திருந்தனர். அதேபோன்றுதான் கடந்தகால அரசுகளும் அனைத்தின மக்களையும் பாதுகாத்திருந்தனர். நாமும் நாட்டின் எதிர்காலத்துக்காக இந்தச் செயற்பாட்டை முன்னோக்கிக் கொண்டுசெல்ல அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என்றார்.

 

 

Mon, 07/08/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை