தெரிவுக்குழு அமைக்க வேண்டுமென சபையில் எதிரணி கோரிக்ைக

வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலரின் நடவடிக்ைக

ஐக்கிய நாடுகளின் விசேட தூதுவரை சந்தித்து நீதிமன்றில் விசாரணை செய்யப்படும் வழக்கு தொடர்பாக விளக்கமளிக்குமாறு, பிரதம நீதியரசர் மற்றும் கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதிகளுக்கு வெளிவிவகார அமைச்சின் பதில் செயலாளர் கோரியமை தொடர்பில் தெரிவுக்குழு அமைத்து விசாரணை நடத்துமாறு ஆளும்தரப்பு, எதிர்த்தரப்பு எம்.பிகள் நேற்று (24) சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக கட்சித் தலைவர் கூட்டத்தில் ஆராய்ந்து முடிவு எடுப்பதாக சபாநாயகர் கரு ஜெயசூரிய பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

தினப்பணிகளின் ஆரம்பத்தில் சபாநாயகரின் அறிவிப்பின் போதே

அவர்கள் ​மேற்கண்டவாறு தெரிவித்தனர். எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜ பஷ, தினேஷ் குணவர்த்தன உட்பட சில எம்.பிக்கள், வெளிவிவகார அமைச்சின் மேலதிக பதில் செயலாளர் அஹமத் ஏ. ஜாவாதினால் பிரதம நீதியரசருக்கும் மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கும் அனுப்பிய கடிதம் தொடர்பில் நேற்றுமுன்தினம் வினவினர்.இதுதொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து சபாநாயகர் நேற்று விளக்கமளித்தார்.

இந்த விடயம் குறித்து எனக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், வெளிவிவகார அமைச்சின் செயலாளர் மற்றும் நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சரை அறிவுறுத்தி இந்த சந்திப்பை நிறுத்த நடவடிக்கை எடுத்தேன். நீதிமன்ற சுயாதீனத்தன்மையை பாதுகாக்கும் வகையில் எதிர்காலத்திலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் பாதுக்க நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் என்னை சந்தித்து இதுதொடர்பாக தெளிவுபடுத்தினார். அதேபோல் பிரதம நீதியரசர்கள், வெளிநாட்டு தூதுவர்களுடன் சினேகபூர்வ சந்திப்புக்களை மேற்கொள்வது கடந்த காலங்கிலும் இடம் பெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து எழுந்த எதிர்க்கட்சி உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன எம்.பி கருத்து வெளியிடுகையில், நீதிமன்ற சுயாதீனத்தை பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுத்தமை தொடர்பில் சபாநாயகருக்கு, நன்றி தெரிவிக்கின்றோம். என்றாலும் வெளிவிவகார அமைச்சின் செயலாளரினால் அனுப்பப்பட்ட கடிதம் பாரதூரமானது என்பதாலே,உடனடியாக செயற்பட்டு நடவடிக்கை எடுக்க முடிந்துள்ளது. நீதித்துறையின் சுயாதீனத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

அவர் செய்த தவறுக்கு மன்னிப்பு வழங்கி இந்த பிரச்சினையை முடித்துவிடமுடியாது. அதனால் அவருக்கு எதிராக பாராளுமன்றத்தில் பிரேரணை ஒன்று கொண்டுவந்து விசாரணை நடத்த அனுமதி வழங்கவேண்டும். அல்லது தவறு செய்த செயலாளரை வேறு திணைக்களம் ஒன்றுக்கு இடம்மாற்ற வேண்டும் என்றார்.

இதையடுத்து அமைச்சர் அஜித் பி பெரேரா கருத்துத் தெரிவித்தார்.இது தொடர்பில் உடனடியாக தலையிட்டு தீர்த்து வைத்தமைக்கு நாங்கள் சபாநாயகருக்கு நன்றி தெரிவிக்கின்றோம். கடந்த காலங்களில் பாராளுமன்றத்துக்கு தலைமை வகித்தவர்கள் றப்பர் சீலாகவே செயற்பட்டு வந்துள்ளனர். விசாரிக்கப்பட்டுவரும் வழக்கு நடவடிக்கைகள் தொடர்பில் இவ்வாறான கலந்துரையாடல்களை மேற்கொள்வதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. எதிர்காலத்திலும் இவ்வாறான நடவடிக்கைகள் இடம்பெறாமல் தடுக்க நீண்டகால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

வாசுதேவ நாணயக்கார எம்.பி தெரிவிக்கையில், எமது நாட்டின் நீதிமன்ற சுயாதீனத்தன்மையை பாதுகாக்கும் தேவையை ஐக்கிய நாடுகள் சபைக்கும் தெரிவிக்க வேண்டும். அதேபோன்று எமது நீதிபதிகள் குழுவொன்று அமெரிக்காவுக்கு பயிற்சிக்காக அனுப்பப்பட்டிருந்தது. அங்கும் எமது விசேட நீதிமன்றம் தொடர்பாகவும் அங்கு விசாரணை மேற்கொள்ளும் நீதிபதிகள் தொடர்பாகவும் வினவப்பட்டதாக அங்குசென்ற நீதிபதி ஒருவர் ஊடாக எமக்கு அறியக்கிடைத்தது. அந்த நீதிபதி அவ்விடயங்களை பதிவுசெய்து வந்திருக்கின்றார் என்று கூறினார்.

எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான மஹிந்த அமரவீர தெரிவிக்கையில், இந்த விடயத்தை சாதாரண விடயமாக கருதிவிட முடியாது. நீதித் துறையை சுயாதீனமாக செயற்பட இடமளிக்க வேண்டும் என்று தெரிவிப்பதும் இவர்களே என்றார். அத்துடன் வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலாளருக்கு இவ்வாறு அறிவிப்பொன்றை செய்வதற்கு யார் அதிகாரம் வழங்கியது என்பதை ஆராய வேண்டும். அதற்காக பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றை அமைத்து இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரினார். நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சர் தலதா அத்துகோரள அடுத்து கருத்துத் தெரிவித்தார். நீதிபதிகள் குழுவொன்று அமெரிக்காவுக்கு சென்றவேளை அங்கு இடம்பெற்ற கலந்துரையாடலின் குரல் பதிவொன்று தன்னிடம் இருப்பதாக வாசுதேவ நாணயக்கார தெரிவிக்கிறார். இதற்கு முன்னரும் இந்த விடயத்தை சபையில் அவர் தெரிவித்திருந்தார். அப்போதும் நாங்கள் இந்த குரல் பதிவு மற்றும் ஏனைய தகவல்கள் இருந்தால் அதனை தாருங்கள் நடவடிக்கை எடுப்போம் எனக் கூறியதாக அமைச்சர் தலதா அத்துக்கோரல தெரிவித்தார்.

 

ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்

Thu, 07/25/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை