புதிய அரசியலமைப்பு திருத்தம்; மக்கள் வழங்கிய ஆணையை அரசு நிறைவேற்றவில்லை

தமிழ் மக்களை போல் முஸ்லிம்களும் விரக்தியில் உள்ளனர்

புதிய அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டு வருவதற்காகவே தற்போதைய அரசாங்கத்துக்கு மக்கள் ஆணை வழங்கினர். ஆனால் அரசாங்கத்தினால் அதனை நிறைவேற்ற முடியாமல் போயுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அதனால் தமிழ் மக்களைப் போல் முஸ்லிம் மக்களும் தீர்வை எட்டுவதில் விரக்தியுற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் புதிய அரசியலமைப்பினூடாக இந்த நாடு பிளவுபடும் என்ற சந்தேகத்திலிருந்து சிங்கள மக்கள் மீளவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்

பாராளுமன்றத்தில் நேற்று புதிய அரசியலமைப்பு தொடர்பில் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வரும்போது புதிய அரசியலமைப்பு தயாரிக்கப்பட்டு அதனூடாக அதிகார பரவலாக்கம் மற்றும் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

ஆனால் அந்த வாக்குறுதியை நிறைவேற்ற அரசாங்கம் தவறியுள்ளது.

அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தில் 19ஆம் திருத்தத்தை கொண்டுவந்து அதன் மூலம் ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைக்க முடிந்துள்ளது.

எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இரண்டு தடவைகள் ஜனாதிபதியாக இருந்தார்.நிறைவேற்று ஜனாதிபதி முறையை இல்லாமலாக்குவதாகவே அவரும் தெரிவித்திருந்தார். அதேபோன்று அனைத்து தலைவர்களும் இதனையே தெரிவித்திருக்கின்றனர்.

ஆனால் ஆட்சிக்கு வந்ததும் அவர்கள் மனம் மாறுகின்றனர். என்றாலும் நிறைவேற்று ஜனாதிபதி முறையை இல்லாதொழிக்க வேண்டும் என்ற விடயத்தில் நாம் அவ்வளவு அக்கறை காட்டவில்லை.

எமது சமூகம் பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து வருகின்றது.

ஏப்ரல் தாக்குதலை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். அதேபோன்று பிரச்சினைகளுக்கு நாங்கள் எப்போதும் ஜனநாயக வழியிலே தீர்வுகாண முற்பட்டிருக்கின்றோம். வன்முறைகளை ஒருபோதும் கையாண்டதில்லை. அதேபோன்று எமது சமுகத்தின் பிரச்சினைகளை நாம் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றோம். மற்றவர்கள் இதில் தலையிட த்தேவையில்லை.

தற்போது தயாரிக்கப்பட்டிருக்கும் அரசியலமைப்பு வரைபில் பல நல்ல விடயங்கள் இருக்கின்றன.

செனட் சபை என்றும் மேல் சபை என்றும் புதிய கட்டமைப்புக்கள் இருக்கின்றன. அதிகார பரவலாக்கம் மூலமாகவே ஒற்றுமைமிக்க சமுகத்தை கட்டியெழுப்ப முடியும்.

லோரன்ஸ் செல்வநாயகம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

 

 

Sat, 07/27/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை