ஹொங்கொங் ஆர்ப்பாட்டக்காரர்களின் வன்முறைகளுக்கு சீனா கண்டனம்

ஹொங்கொங் பாராளுமன்றத்தை சேதப்படுத்திய ஆர்ப்பாட்டக்காரர்கள் மோசமான சட்டவிரோதச் செயலில் ஈடுபட்டதாகவும் சட்டத்தின் ஆட்சியை நசுக்கியதாகவும் சீனா குற்றம்சாட்டியுள்ளது.

ஹொங்கொங்கில் கடந்த திங்களன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்களின் குழுவொன்று அந்த பிராந்தியத்தின் சட்ட மன்றக் கட்டிடத்தை ஆக்கிரமித்து ஒரு சில மணி நேரம் முற்றுகையில் ஈடுபட்டனர்.

நூற்றுக்கணக்கான பொலிஸார் கண்ணீர் புகைப்பிரயோகம் மேற்கொண்டு கட்டிடத்தில் இருந்து ஆர்ப்பாட்டக்காரர்களை கலைத்தனர்.

இந்த சட்டவிரோதச் செயலுக்கு பொறுப்பான குற்றவாளிகள் மீது உடன் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சீனா வலியுறுத்தியுள்ளது.

ஹொங்கொங் சீனாவின் ஓர் அங்கமாக இருந்தபோதும் “ஒரு நாடு, இரு அமைப்புகள்” என்ற ஏற்பாட்டின் கீழ் ஹொகொங்கிற்கு குறிப்பிடத்தக்க சுயாட்சி வழங்கப்பட்டுள்ளது.

சில குற்றங்களில் ஈடுபடுபவர்களை சீனாவுக்கு நாடு கடத்தும் சர்ச்சைக்குரிய வட்டம் ஒன்றுக்கு எதிராக ஹொங்கொங்கில் கடந்த பல வாரங்களாக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வந்த நிலையிலேயே அங்கு மீண்டும் ஒழுங்கீனம் ஏற்பட்டுள்ளது.

இந்த வன்முறைகள் குறித்து சீனாவைப் போன்று ஹொங்கொங் தலைவி கெர்ரி லாமும் கருத்து வெளியிட்டிருந்தார். ஆர்ப்பாட்டக்காரர்கள் தீவிர வன்முறையில் ஈடுபட்டதற்கு செய்தியாளர் சந்திப்பில் அவர் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

பிரிட்டனின் நிர்வாகத்திலிருந்து சீனாவிடம் ஹொங்கொங் ஒப்படைக்கப்பட்ட 22ஆவது ஆண்டு தினம் திங்கட்கிழமை அனுசரிக்கப்பட்டது. இந்த நாளில் ஜனநாயகத்திற்கு ஆதரவான பேரணி ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

“போராட்டக்காரர்கள் குறிப்பாக சட்டமன்றத்திற்குள் அத்துமீறி நுழைந்தவர்களின் செயல் கண்டிக்கப்படவேண்டியது. ஹொங்கொங்கில் சட்டத்தின் ஆட்சியே அனைத்தையும் விட முக்கியமானது” என அவர் குறிப்பிட்டார்.

Wed, 07/03/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை