சஜித் பிரேமதாச களமிறங்கினால் வெற்றி நிச்சயம்

ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக சஜித் பிரேமதாச களமிறங்கினாலே வெற்றியை உறுதிசெய்ய முடியுமென அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்கப்படும் ஐ.தே.கவின் வேட்பாளர் கட்சியைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்பதுடன், வெற்றிபெறக் கூடியவராகவும் இருக்க வேண்டும். வெற்றி பெறக்கூடிய பிரபல்யம்மிக்க வேட்பாளராக சஜித் பிரேமதாசவே காணப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். வெற்றிபெறக்கூடிய வேட்பாளர் என்ற இயலுமை சஜித் பிரமேதாசவுக்கு இருப்பதாகவே தான் கருதுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

இதற்காக தற்போதைய தலைவரை விலக்க வேண்டும் என்றோ அல்லது ஒதுக்கிவைக்க வேண்டும் என்றோ கூறவரவில்லை. சஜித் பிரேமதாச களமிறங்கினால் அடுத்த பக்கத்தில் யார் களமிறங்கினாலும் ஐ.தே.கவுக்குப் பிரச்சினையில்லை. மறுபக்கத்தில் வேட்பாளர் என்பது யார் என சங்கீத கதிரைப்போட்டி நடைபெறுகிறது. எந்த ராஜபக்ஷ களமிறங்கினாலும், ஐ.தே.கவின் வேட்பாளராக சஜித் பிரேமதாச போட்டியிட்டால் நிச்சயமாக வெற்றிபெற முடியும்.

அதேநேரம், முன்னாள் பிரதமர் டி.எஸ்.சேனநாயக்க மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் நோக்குகளை தொடர்ந்தும் முன்கொண்டுசெல்லக் கூடியவராகவும் அவர் இருக்க வேண்டும்.

சகல கட்சிகளும் இனவாதத்தை முன்னிறுத்தி அரசியல் செய்துவரும் நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி, மத்தியஸ்த நிலையிலிருந்து அரசியல் செய்வதுடன், ஜனாநயகத்துக்கான கட்சியாகவும் ஐ.தே.க காணப்படுகிறது.

இவ்வாறான சூழ்நிலையில் சஜித் பிரேமதாசவை அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் வெல்ல வைப்பதற்கு உலக நாடுகளின் நம்பிக்கையைப் பெற்ற சபாநாயகர் கரு ஜயசூரிய உள்ளிட்ட அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

Thu, 07/04/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை