அரசியல் அதிகாரத்தின் மூலம் சட்டங்களை மீறி நிதிப் பரிமாற்றம்

பெற்றி பல்கலைக்கழகத்திற்கு வெளிநாடுகளிலிருந்து பெற்றுக் கொள்ளப்பட்டுள்ள நிதி, அரசியல் அதிகாரத்தின் மூலம் பலவந்தமாக உள்நாட்டு சட்டங்களை மீறியே பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆகவே, பெற்றி பல்கலைக்கு எவ்வாறு நிதி பரிமாற்றங்கள் இடம்பெற்றுள்ளதென நுணுக்கமான கணக்காய்வொன்றை நடத்த வேண்டுமென கல்வி மற்றும் மனிதவளம் தொடர்பிலான பாராளுமன்ற துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் அஷு மாரசிங்க தெரிவித்தார்.

அலரி மாளிகையில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,

கல்வி மற்றும் மனிதவளம் தொடர்பிலான பாராளுமன்ற துறைசார் மேற்பார்வைக்குழு, பெற்றி பல்கலைக்கழம் தொடர்பிலான விசாரணை அறிக்கையை கடந்த 21ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தது. அமைச்சரவையில் அறிக்கைத் தொடர்பில் இறுதி முடிவெடுக்க அமைச்சரவை உபக்குழுவொன்று நியமிக்கப்பட்டது. இரண்டு வாரங்களுக்குள் மேற்படி அமைச்சரவை உபக்குழுவின் விளக்கத்தை அறிவிக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. அடுத்தவாரம் அவர்கள் தமது விளக்கத்தை முன்வைப்பார்கள். என்றாலும், இந்த அறிக்கை தொடர்பில் சமூகத்தில் பல்வேறு கருத்துகள் நிலவி வருகின்றன. இங்கு நடைபெற்றுள்ள தவறான நிதி பரிமாற்றங்கள் தொடர்பில் அறிந்துக்கொள்ள நுணுக்கமான கணக்காய்வுவொன்று அவசியமாகும். இந்நிறுவனம் தெளிவாக நாட்டின் சட்டத்தை மீறியுள்ளது.

சில அரசியல்வாதிகள் இதனை முஸ்லிம் மக்களுக்கு எதிராக செய்யப்படும் செயற்பாடென அர்த்தப்படுத்த பார்க்கின்றனர். நாட்டில் உள்ள சட்டங்களுக்கு அப்பால் பலவந்தமாக அரசியல் அதிகாரங்களை பயன்படுத்தி செய்யப்பட்டுள்ள தவறுகளையே நாம் சுட்டிக்காட்டுகின்றோம்.

அரசாங்கத்துக்கு நாம் தெரிவிப்பதாவது, இந்த அறிக்கையை முழுமையாக ஆய்வுக்கு உட்படுத்தி தீர்மானங்களை எடுக்குமாறு வேண்டுகின்றோம். நான் இங்கு ஐ.தே.கவுக்காக செயற்பட்டிருக்கவில்லை கல்வி மற்றும் மனிதவளம் தொடர்பிலான பாராளுமன்ற மேற்பார்வை குழுவின் உறுப்பினர்கள் அனைவரினதும் பங்குபற்றலில் தான் அறிக்கையை தயாரித்துள்ளோம்.

அதேபோன்று பாராளுமன்ற துறைசார் மேற்பார்வைக் குழுக்களின் செயற்பாடுகளை ஊடகங்களில் வெளிப்படுத்தி சபாநாயகர் அனுமதியளிக்க வேண்டும்.

சில நாடுகளில் அமைச்சர்கள் கூட பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுக்களுக்கு அழைக்கப்படுகின்றனர். அதற்கான அதிகாரம் மேற்படி குழுக்களுக்கு உள்ளன. பாராளுமன்றத் தெரிவுக்குழுக்களின் செயற்பாடுகள் தொடர்பில் ஊடகங்களில் வெளியிடப்படுவதில்லை. ஆகவே, நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்க இந்தச் செயற்பாட்டை நாம் கட்டாயம் செய்ய வேண்டும் என்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Sat, 07/20/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை