திருடிய காரை 900 கி.மீ ஓட்டிச்சென்ற சிறுவர்கள்

அவுஸ்திரேலியாவில் நான்கு சிறுவர்கள் பணம் சேகரித்து மீன்பிடிக்கும் தூண்டில்களை எடுத்துக்கொண்டு சட்டவிரோதமாக வாகனம் ஒன்றை 900 கிலோமீற்றர் ஓட்டிச் சென்றிருப்பதாக அந்நாட்டு பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

10 மற்றும் 14 வயதுகள் கொண்ட மூன்று சிறுவர்கள் மற்றும் சிறுமி ஒருவர் நியு செளத்வேல்ஸின் கிராப்டன் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வார ஆரம்பத்தில் குயீன்ஸ்லாந்து கிராஸ்மர் பகுதியில் இருந்து இந்த சிறுவர்கள் புறப்பட்டுள்ளனர். அதில் ஒரு சிறுவன் தான் வீட்டை விட்டுச் செல்வதாக கடிதம் எழுதி வைத்துவிட்டே பயணித்துள்ளான்.

ஒரே குடும்பத்தைச் சேராத இந்த சிறுவர்கள் இவர்களின் பெற்றோர்களில் ஒருவரின் கார் வண்டியை எடுத்துக் கொண்டே தனியே பயணித்துள்ளனர்.

140 கிலோமீற்றர் தூரம் பயணித்த நிலையில் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் இவர்கள் பெட்ரோலை திருடியதாக குற்றம்சாட்டப்படுகிறது. குறிப்பாக ஒரு சந்தர்ப்பத்தில் 10 மணி நேரம் இவர்கள் இடைவிடாது காரை எடுத்துச் சென்றிருப்பதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

ராக்ஹாம்ப்டன் நகரிலிருந்து 11 மணிநேரப் பயண தூரத்தில் உள்ள கிராப்டன் நகருக்கு அருகே சிறுவர்கள் ஓட்டிய கார் கண்டுபிடிக்கப்பட்டது. காரைப் பூட்டிக்கொண்டு உள்ளேயிருந்த சிறுவர்கள் வெளியே வர மறுத்தனர். உரிய சாதனங்களைப் பயன்படுத்திப் பூட்டை உடைத்து பொலிஸார் அவர்களைக் கைது செய்தனர். இரண்டு நாட்களில் அவர்கள் ஆயிரம் கிலோமீட்டருக்கும் அதிகமாக காரோட்டிச் சென்றிருப்பதைக் கற்பனை செய்யவே முடியவில்லை. வீதிப் பயணத்தின்போது சிறார் செய்த குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தப்படுவதாகக் பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

குயீன்ஸ்லாந்து மற்றும் நியூ செளத் வேல்ஸில் வாகன ஓட்டுநர் அனுமதிப்பத்திரம் பெற 17 வயதுக்கு மேற்பட்டிருக்க வேண்டும்.

Tue, 07/16/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை