அவன்ட் கார்ட் தலைவர் உட்பட 7 பேரை கைது செய்ய சட்ட மாஅதிபர் உத்தரவு

நிஸ்ஸங்க சேனாதிபதி வெளிநாட்டுக்கு தப்பியோட்டம்

அவன்ட் கார்ட் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி மற்றும் ஏழு பேரை கைது செய்து அவர்களை நீதிமன்றத்தில் நிறுத்துமாறு சட்ட மாஅதிபர் டப்புள்ள டி லிவேரா நேற்று பதில் பொலிஸ் மாஅதிபருக்கு உத்த ணரவிட்டுள்ளார்.

இந்நிலையில் நிஸ்ஸங்க சேனாதிபதியும் மற்றுமொரு சந்தேக நபரும் நாட்டை விட்டு தப்பியோடியுள்ளதாக சி.ஐ.டி. தகவல் வழங்கியதையடுத்தே சட்ட மாஅதிபருக்கு இவ்வாறு உத்தரவு பிறப்பிக்க வேண்டியிருந்ததாக சட்ட மாஅதிபரின் கூட்டிணைப்பு அதிகாரியான அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரட்ண தெரிவித்துள்ளார்.

அவன்ட் கார்ட் மிதக்கும் ஆயுதக் களஞ்சியசாலை தொடர்பாக காலி நீதவான் நீதிமன்றத்தின் விசாரணை தொடர்பாகவே இவர்களை கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நிஸ்ஸங்க சேனாதிபதியும் மற்றும் நால்வரும் சி.ஐ.டி. யினரால் கைது செய்யப்படுவதை தடுக்கும் வகையில் அடிப்படை உரிமைகள் மனுக்களை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர். ஆனால் அந்த மனுக்களை உச்ச நீதிமன்றம் நிராகரிப்பதற்கு முன்னரே சந்தேக நபர்களில் இருவர் நாட்டை விட்டு தப்பியோடியுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

இதன்படி காலி கடற்பகுதியில் 813 அனுமதியற்ற தன்னியக்க துப்பாக்கிகள் மற்றும் 935 ரக தோட்டாக்கள் 200 உள்ளிட்ட துப்பாக்கிகள் மற்றும் வெடிப் பொருட்களுடன் வர்த்தக கப்பல்களை சட்டவிரோதமாக செயற்படுத்தியமைக்காக கீழ்க்காணும் சந்தேக நபர்களை கைது செய்யுமாறு பதில் பொலிஸ் மாஅதிபர் சந்தன விக்கிரமரட்னவுக்கு சட்ட மாஅதிபர் உத்தரவிட்டுள்ளார்.

ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் பாலித பெர்னாண்டோ, ஓய்வு பெற்ற  மேஜர் ஜெனரல் கருணாரத்ன எகொடவெல, அவன்ட் கார்ட் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி, ஓய்வுபெற்ற கடற்படை கொமடோர் விஸ்வஜித் நந்தன தியபலனகே, ஓய்வு பெற்ற எயார் வைஸ் மார்ஷல் பீ.டீ. பிரேமசந்திர, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளரும் முன்னாள் மேலதிக பாதுகாப்பு செயலாளர் சமன் திசாநாயக்க, முன்னாள் சிரேஷ்ட மேலதிக பாதுகாப்பு செயலாளர் தமயந்தி ஜயரட்ண மற்றும் ரக்னா லங்கா நிறுவனத்தின் தலைவர் விக்டர் சமரவீர ஆகியோரே கைது செய்யப்படுவதற்காக கூறப்பட்டுள்ள சந்தேக நபர்களாவர்.

இந்த விடயம் தொடர்பான விசாரணையில் ஈடுபட்டுள்ள சி.ஐ.டி.யினர் சந்தேக நபர்களான நிஸ்ஸங்க சேனாதிபதி மற்றும் நந்தன நியபலனகே ஆகிய இருவரும் ஏற்கனவே நாட்டை விட்டு தப்பியோடியுள்ளதாக சட்ட மாஅதிபருக்கு அறிவித்துள்ளனர். ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பாலித பெர்னாண்டோ, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கருணாரத்ன எடுகொடவெல, நிஸ்ஸங்க சேனாதிபதி, ஓய்வுபெற்ற கடற்படை கொமடோர் விஸ்வஜித் நந்தன தியபலனகே, மற்றும் சமன் திசாநாயக்க ஆகிய சந்தேக நபர்களின் அடிப்படை உரிமை மனுக்களை நிராகரிக்குமாறு உச்ச நீதிமன்றம் கடந்த புதன்கிழமை (4) உத்தரவிட்டிருந்தது.

மேற்படி மிதக்கும் ஆயுதக் களஞ்சியசாலை தொடர்பான மாஜிஸ்திரேட் விசாரணை தொடர்பாக சி.ஐ.டி. இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று இந்த அடிப்படைகள் உரிமைகள் மனுக்களில் இவர்கள் கேட்டிருந்தனர்.

மேற்கூறிய 8 சந்தேக நபர்களும் துப்பாக்கி கட்டளைச் சட்டம் மற்றும் வெடிப் பொருட்கள் கட்டளைச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றங்களை இழைத்தவர்கள் என்பதை நிரூபிப்பதற்கு போதுமான சான்றுகள் இருப்பதாக சட்ட மாஅதிபர் கூறுகிறார். அதேநேரம் தண்டனைச் சட்டக் ​கோவையின் 189 மற்றும் 190 ம் பிரிவுகளின் கீழ் பொய்ச் சாட்சியங்களை மேற்கொண்டதாக சமன் திசாநாயக்க, பீ.டீ. பிரேமசந்திர மற்றும் நிஸ்ஸங்க சேனாதிபதி ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும் சட்ட மாஅதிபர் மேலும் கூறினார்.

 

 

Sat, 07/06/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை