தலிபான் - அமெரிக்கா இடையே 7ஆவது சுற்று பேச்சுகள் ஆரம்பம்

தலிபான் மற்றும் அமெரிக்கா இடையில் கட்டார் தலைநகர் டோஹாவில் புதிய சுற்று அமைதிப் பேச்சுவார்த்தை கடந்த சனிக்கிழமை ஆரம்பமானது.

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஆப்கான் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் தலிபான்களுடன் உடன்பாடு ஒன்றை எட்டுவதற்கு அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

“அமெரிக்க பிரிநிதிகள் மற்றும் இஸ்லாமிய இராச்சியத்திற்கு இடையிலான பேச்சுவார்த்தையாளர்கள் டோஹாவில் ஏழாவது சுற்றுப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தனர்” என்று தலிபான் பேச்சாளர் சபியுல்லா முஜாஹித் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

ஆப்கானில் அமெரிக்காவின் நீண்ட யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியாகவே இந்த ஏழாம் சுற்று பேச்சுவர்த்தை இடம்பெறுகிறது.

எனினும் வடக்கு ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் தாக்குதலில் 25 அரச ஆதரவுப் படையினர் கொல்லப்பட்ட நிலையிலேயே இந்த பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. தலிபான்களால் சுற்றிவளைக்கப்பட்ட படையினரை மீட்கும் இராணுவத்தின் முயற்சியின்போது இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

கடந்த 17 ஆண்டுகளாக நிலைகொண்டிருக்கும் அமெரிக்க துருப்புகள் ஆப்கானில் இருந்து வெளியேறுவதை பிரதானமாகக் கொண்டே இந்தப் பேச்சுவார்த்தை இடம்பெறுகிறது. இதற்கு பகரமாக நாட்டில் அமெரிக்காவுக்கு எதிரான பயங்கரவாதக் குழுக்களுக்கு இடமளிக்காமல் இருக்க தலிபான்கள் வலியுத்தப்படுகின்றனர்.

2001 செப்டெம்பர் 11 தாக்குதலுக்கு முன்னர் ஆப்கானில் ஆட்சியில் இருந்த தலிபான்கள் அங்கு அல் கொய்தா அமைப்புக்கு அடைக்கலம் வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை, வெளிநாட்டு துருப்புகளின் இருப்பு, ஆப்கான் தரப்புகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை மற்றும் நிரந்தர யுத்த நிறுத்தம் என்று நான்கு அம்சங்களைக் கொண்டதாகவே இந்தப் பேச்சுவார்த்தை இடம்பெறுகிறது.

எதிர்வரும் ஆப்கான் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் தலிபான்களுடன் உடன்பாடு ஒன்றை எட்டுவதற்கு எதிர்பார்ப்பதாக அமெரிக்க அதிகாரிகள் முன்னதாக குறிப்பிட்டிருந்தனர். ஆப்கான் ஜனாதிபதி தேர்தல் ஏற்கனவே இரண்டு தடவைகள் பிற்போடப்பட்ட நிலையில் தற்போது வரும் செப்டெம்பரில் நடத்துவதற்கு ஏற்பாடாகியுள்ளது.

Mon, 07/01/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை