எட்டு மாகாணங்களில் கடும் வரட்சி; 5 இலட்சத்து 64,659 பேர் பாதிப்பு

வடக்கு, கிழக்கிலேயே அதிகளவில் வரட்சி

வடக்கு,கிழக்கு,மத்திய உட்பட நாட்டில் எட்டு மாகாணங்களில் நிலவிவரும் கடுமையான வரட்சி காரணமாக 1,58,484 குடும்பங்களைச் சேர்ந்த 5,64,659 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் நேற்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வரட்சியால் வடக்கு,கிழக்கு மாகாணங்களே அதிகமாக பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் புள்ளிவிபரங்கள் குறிப்பிடுகின்றன.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 21,094 குடும்பங்களை சேர்ந்த 70,636 பேர் வரட்சிக்கு முகங்கொடுத்துள்ளனர். மன்னார் மாவட்டத்தில் 18,074 குடும்பங்களைச் சேர்ந்த் 63,115 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 5,516 குடும்பங்களைச் சேர்ந்த 19,262 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 12,767 குடும்பங்களைச் சேர்ந்த 40,095 பேரும், வவுனியா மாவட்டத்தில் 138 குடும்பங்களைச் சேர்ந்த 465 பேரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். வடமாகாணத்தில் மொத்தமாக 57,589 குடும்பங்களைச் சேர்ந்த 1,93,578 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

வடக்கு மாகாணத்துக்கு அடுத்தப்படியாக கிழக்கு மாகாணமே வரட்சியால் அதிக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இங்கு நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் விவசாய நிலங்கள் வரண்டுபோயுள்ளன.

வரட்சியால் அம்பாறை மாவட்டத்தில் 11,536 குடும்பங்களைச் சேர்ந்த 69,957 பேரும், திருக்கோணமலை மாவட்டத்தில் 2,877 குடும்பங்களைச் சேர்ந்த 9,380 பேரும் 23,518 குடும்பங்களைச் சேர்ந்த 77,633 பேரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். கிழக்கில் மொத்தமாக 37,931 குடும்பங்களைச் சேர்ந்த 1,56, 990 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

ஊவா மாகாணத்தில் 12,043 குடும்பங்களைச் சேர்ந்த 37,856 பேரும் தென் மாகாணத்தில் 2,149 குடும்பங்களைச் சேர்ந்த 9,316 பேரும் வடமத்திய மாகாணத்தில் 9,662 குடும்பங்களைச் சேர்ந்த 32,387 பேரும் வடமேல் மாகாணத்தில் 17,222 குடும்பங்களைச் சேர்ந்த 56,751 பேரும் சப்ரகமுவ மாகாணத்தில் 3,201 குடும்பங்களைச் சேர்ந்த 10,964 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மத்திய மாகாணத்தில் மாத்தளை மாவட்டத்தில் 15,132 குடும்பங்களைச் சேர்ந்த 53,161 பேரும் கண்டி மாவட்டத்தில் 3,555 குடும்பங்களைச் சேர்ந்த 13,646 பேரும் பாதிப்புக்கு ள்ளாகியுள்ளனர்.

மொத்தமாக மேல் மாகாணத்தை தவிர்ந்து ஏனைய எட்டு மாகாணங்களிலும் 1,58,484 குடும்பங்களைச் சேர்ந்த 5,64,659 பேர் வரட்சிக்கு முகங்கொடுத்துள்ளனர்.

வரட்சிக்கு முகங்கொடுத்துள்ள மக்களுக்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள நிவாரணங்கள் தொடர்பில் அவசரகால நடவடிக்கை நிலையத்தின் இயங்குனர் டபிள்யூ.ஏ.ஆரியரத்தினவிடம் வினவிய போது,

பொது நிர்வாகம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ரஞ்ஜித் மத்தும பண்டார மற்றும் அமைச்சின் செயலாளர் ரத்னசிறி ஆகியோரின் ஆலோசனையின் பிரகாரம் வரட்சியால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள மக்களுக்குத் தேவையான நிராவண நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் கிராம சேவகர்களின் கோரிக்கைகளின் பிரகாரம் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு குடிதண்ணீரை பெற்றுக்கொடுப்பதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், தேசிய அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் மாவட்ட ரீதியில் அமைந்துள்ள அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையங்கள் ஊடாக நிவாரண நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

 

 

 

Sat, 07/13/2019 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக