மட்டு. பொலிஸார் மீதான தாக்குதல்; சூத்திரதாரிகள் 4 பேர் உட்பட 21 பேர் கைது

பறித்துச்சென்ற துப்பாக்கியும் மீட்பு

மட்டக்களப்பில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரிடமிருந்து ரிவோல்வர் மற்றும் அதற்கு பயன்படுத்தும் தோட்டாக்களைப் பறித்து கடமையை செய்ய விடாமல் இடையூறு விளைவித்தார்களென சந்தேகிக்கப்படும் பிரதான சந்தேக நபர்கள் நால்வரை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.  

அத்துடன் பறித்துச் சென்ற பொலிஸ்  உத்தியோகத்தரின் கைத்துப்பாக்கியை நேற்று   பிற்பகல் புதூர் பகுதியில் குப்பை மேட்டிற்கருகாமையிலிருந்து மீட்டுள்ளதாகவும்  பொலிஸார் தெரிவித்தனர். 

திபுலதீவு குறுக்கு வீதி இலக்கம் 46/14,07என்ற முகவரியைச் சேர்ந்த நிம்மி என்றழைக்கப்படும் வாசுபாலா நிர்மலராஜ்(23), சேத்துக்குடா விநாயகர் வீதியைச் சேர்ந்த ராமையா லெட்சுமணன்(55), திபுலதீவு பிரதான வீதி இலக்கம் 43/100எனும் முகவரியைச் சேர்ந்த சிவசங்கர் துஷாந்தன்(19) மற்றும் புதூர் முதலாம் குறுக்கு வீதியைச் சேர்ந்த சிவாநந்தராஜா புருசோத்தமன்(19) ஆகிய நால்வரே சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

மட்டக்களப்பு புதூர் பகுதியில் வியாழக்கிழமை (04) காலை 11மணியளவில் மட்டக்களப்பு, புதூர் சிமில தீவுப்பகுதியில் தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரை தடுத்து நிறுத்துவதற்கு போக்குவரத்து பொலிஸார் முயற்சித்துள்ளனர். 

அந்த சமயம் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் சென்ற இருவரும், எதிரே வந்த பட்டா ரக வாகனத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளனர். இதனைத் தொடர்ந்து இப் பகுதியில் ஒன்று சேர்ந்த இளைஞர்கள் சிலர் போக்குவரத்து பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் அங்கு நின்ற போக்குவரத்து பொலிஸாரின் கைத்துப்பாக்கியை ஒருவர் பறித்துக்கொண்டு ஓடியுள்ளார். இதையடுத்து அவ்விடத்தில் பதற்ற நிலை காணப்பட்டுள்ளது. 

இதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு புதூர் பகுதியில் இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வந்தன. 

இந்த நிலையில் பொலிசார் அப்பகுதியில் தேடுதல்களை நடாத்திக் கொண்டிருந்த போது நேற்று(05) வெள்ளிக்கிழமை பிற்பகல் புதூர் 3ஆம் குறுக்கு வீதியில் காணப்பட்ட குப்பை மேட்டுக்கு அருகாமையில் பறித்துச் சென்ற கைத்துப்பாக்கி கிடந்துள்ளது.

இதனையடுத்து துப்பாக்கி பொலிசாரினால் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். 

இது தொடர்பில் விசாரணைகள் நடைபெற்றுவருவதுடன் பிரதான 5சந்தேக நபர்கள் உட்பட 21பேர் சந்தேகத்தின் பேரில் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர். 

லக்ஷ்மி பரசுராமன் , புதிய காத்தான்குடி தினகரன் நிருபர் 

 

 

 

Sat, 07/06/2019 - 09:13


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை