3 மோட்டார் சைக்கிளில் வந்த ஆவா குழு மீதே சூடு

மானிப்பாயில் இளைஞன் பலி

பொலிஸ் பேச்சாளர்

யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் வாள்வெட்டு ஆவா குழுவை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு 8.40 மணியளவில் மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுதுமலை வடக்கு தமிழ் கலவன் பாடசாலை அருகாமையில் இடம்பெற்றது.

இதன்போது கொடிகாமம் கச்சாய் பகுதியை சேர்ந்த செல்வரத்தினம் கவிகஜன் என்ற 23 வயதான இளைஞனே கொல்லப்பட்டவராவர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வாள்வெட்டு குழு உறுப்பினர் மீதே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.

மானிப்பாய் சுதுமலை பகுதியில் வாள்வெட்டுக் குழு தாக்குதல் நடத்தவுள்ளதாக பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து குறித்த வாள் வெட்டு

குழுவை கைது செய்வதற்காக மானிப்பாய், சுன்னாகம் ஆகிய பொலிஸ் நிலையங்களை சேர்ந்த பொலிஸாரை உள்ளடக்கிய விசேட பொலிஸ் குழு சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது.

இவ்வாறான நிலையில் கொடிகாமம் பகுதியில் இருந்து 3 மோட்டார் சைக்கிளில் 8 இளைஞர்கள் மானிப்பாய் வீதியை நோக்கி, வாள்களுடன் சென்றுள்ளனர். இதன்போது, மற்றைய குழுவினர் மானிப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். இதனையடுத்து குறித்த குழுவை கைது செய்வதற்காக பொலிஸார் அவர்களை மறித்துள்ளனர். இதன்போது மோட்டார் சைக்கிளில் சென்ற குழுவினர் பொலிஸாருக்கு வாளால் காட்டிவிட்டு, அங்கிருந்து தப்பிச் செல்ல முற்பட்டுள்ளனர். இதன்போதே அவர்களை நோக்கி பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

துப்பாக்கிப் பிரயோகத்தில் படுகாயமடைந்த இவ் இளைஞனை பொலிஸார் உடனடியாக யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி அவ் இளைஞன் வைத்தியசாலையில் உயிரிழந்தார்.

துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்று இளைஞன் வீழ்ந்திருந்த இடத்திலிருந்து வாள்கள் இரண்டும், மோட்டர் சைக்கிள் ஒன்றும் மீட்கப்பட்டதுடன் மோட்டார் சைக்கிளது இலக்கமானது போலியானது எனவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். துப்பாக்கிசூட்டில் கொல்லப்பட்டவர் ஆவா குழு உறுப்பினர் எனவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் கூறினார்.

கொல்லப்பட்டவர்

அடையாளம் காணப்பட்டார்

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு நேற்று அதிகாலை 3 மணிக்கு வருகை தந்த இளைஞனின் உறவினர்கள் அவரை அடையாளம் காட்டினார்கள்.

தென்மராட்சியிலிருந்து 3 மோட்டார் சைக்கிள்களில் 6 இளைஞர்கள் நேற்றிரவு புறப்பட்டனர் என்று இளைஞனின் உறவினர்களால் தெரிவிக்கப்பட்டது. சம்பவத்தில் தப்பித்த அனைவரும் தென்மராட்சியைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

உயிரிழந்த இளைஞனின் தந்தை புற்றுநோயால் உயிரிழந்துவிட்டார் எனவும் ஒரே ஒரு பிள்ளையான இவர் தாயாருடனே வாழ்ந்து வந்தார் என்பதும் விசாரணைகள் மூலம் தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

நண்பர்களிடம் விசாரணை

இதேவேளை கொல்லப்பட்ட நபரின் நண்பர்கள் மூவர் யாழ். பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். சம்பவம் தொடர்பாக அம் மூவரிடமும் வாக்குமூலங்களை பெற்றுக்கொண்டதாகவும் பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடரும் விசாரணை

இச் சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணைகளை மானிப்பாய், யாழ்ப்பாணம் மற்றும் கொடிகாமம் பகுதி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக கொல்லப்ட்ட இளைஞனுடன் வந்திருந்த ஏனைய வாள்வெட்டு கும்பலை சேர்ந்தவர்களை கைது செய்யும் வகையில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ் மாஅதிபரது வழிகாட்டலின் கீழ் யாழ். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரது தலைமையில் இதற்கான ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் குறூப் நிருபர்

Mon, 07/22/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை