அரசுக்கெதிரான பிரேரணை 27 வாக்குகளால் தோல்வி

தமிழ்க் கூட்டமைப்பின் 14 பேரும் பிரேரணைக்கு எதிராக வாக்களிப்பு
டக்ளஸ், துமிந்த, சிவசக்தி உள்ளிட்ட 13 பேர் கலந்துகொள்ளவில்லை

அரசாங்கத்துக்கெதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை 27 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது. ஜே.வி.பியினரால் முன்வைக்கப்பட்ட இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக 92 வாக்குகளும், எதிராக 119 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக ஜே.வி.பி மற்றும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர் உள்ளடங்கலாக 92 பேர் வாக்களித்திருந்தனர். எதிராக ஆளும் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 14 பேரும் வாக்களித்திருந்தனர்.

டக்ளஸ் தேவானந்தா, துமிந்த திஸ்ஸாநாயக்க, சிவசக்தி ஆனந்த உள்ளிட்ட 13 பேர் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. குறிப்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவாக சுதந்திரக் கட்சி உறுப்பினர்களான மஹிந்த அமரவீர, தயாசிறி ஜயசேகர உள்ளிட்டவர்கள் அரசுக்கு எதிராக வாக்களித்திருந்தனர்.

எதிரணியிலுள்ள ஆறுமுகன் தொண்டமான், முத்துசிவலிங்கம், அங்கஜன் இராமநாதன், காதர் மஸ்தான் மற்றும் வியாழேந்திரன் ஆகியோர் நம்பிகையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தடுப்பதற்கு இருந்த தனது பொறுப்பை அரசாங்கம் மீறியிருப்பதாகக் கூறி அரசுக்கு எதிராக ஜே.வி.பியினர் நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவந்தனர்.

பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்படலாம் என முற்கூட்டியே புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்தபோதும் அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லையென நம்பிக்கையில்லாப் பிரேரணையில் ஜே.வி.பி சுட்டிக்காட்டியிருந்தது.

அரசாங்கம் தனது பொறுப்பிலிருந்து விலகியமை உள்ளடங்கலாக நான்கு பிரதான தலைப்புக்களின் கீழ் 13 குற்றச்சாட்டுக்களை ஜே.வி.பி சுமத்தியுள்ளது.

ஜே.வி.பி சமர்ப்பித்திருந்த இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் அக்கட்சியின் உறுப்பினர்கள் ஆறு பேர் கைச்சாத்திட்டிருந்தனர். இதனை இம்மாதம் 10, 11ஆம் திகதிகளில் விவாதத்துக்கு எடுப்பது என கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இதற்கமைய நேற்றுமுன்தினமும், நேற்றும் முழுநாள் விவாதம் நடைபெற்றது. ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க நேற்றுமுன்தினம் விவாதத்தை ஆரம்பித்துவைத்து உரையாற்றினார்.

இதனைத் தொடர்ந்து ஆளும் கட்சி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தமது கருத்துக்களை முன்வைத்தனர். ஜே.வி.பியினர் அரசுக்கு எதிராகக் கொண்டுவந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் அவர்கள் தம்முடன் கலந்துரையாடவில்லையென ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டினர். இது அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவது என்ற உண்மையான நோக்கம் ஜே.வி.பியினருக்கு இல்லையென்றபோதும் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்போம் என ஆரம்பத்திலேயே கூறியிருந்தனர்.

முதல்நாள் விவாதம் ஒத்திவைக்கப்பட்டு நேற்று 11 மணிக்கு மீண்டும் ஒத்திவைப்பு விவாதம் எடுக்கப்பட்டது. ஆளும் கட்சி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் நேற்றும் உரையாற்றியிருந்தனர்.

விவாதம் முடிவடைந்ததும் வாக்கெடுப்புக்கு விடப்பட வேண்டும் என ஆளும் கட்சியினர் கோரிக்கை விடுத்தனர்.

இதற்கமைய மாலை 6.45 மணிக்கு கோரம் மணி ஒலிக்கப்பட்டு இலத்திரனியல் முறையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தமது வாக்குகளை பதிவுசெய்ய சபையில் பொருத்தப்பட்டிருந்த திரையில் அவர்களின் வாக்குகள் காண்பிக்கப்பட்டன.

ஆதரவாக 92 பேரும், எதிராக 119 பேரும் வாக்களித்தனர். 27 வாக்குகளால் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்பட்டிருப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.

தமக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்பட்டதும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் மேசைகளில் தட்டியும், கூக்குரல் எழுப்பியும் தமது மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.

இந்த விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றியிருக்காதபோதும் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்திருந்தார்.

ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்

Fri, 07/12/2019 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக