பப்புவாவில் பழங்குடி மோதல்: 24 பேர் கொடூரமாகக் கொலை

பப்புவா நியுகினியில் பழங்குடியினருக்கு இடையில் ஏற்பட்ட வன்முறையில் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட 24 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஹேலா மாகாணத்தில் போட்டி பழங்குடியினருக்கு இடையில் கடந்த பல தினங்களாக இடம்பெற்று வரும் கொடூர சண்டையிலேயே இவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். உயிரிழப்பு இதனை விடவும் அதிகம் என்று சில செய்திகள் கூறுகின்றன.

பப்புவா நியுகினியில் கடந்த பல ஆண்டுகளில் ஏற்பட்ட மோசமான வன்முறையாக இது உள்ளது. தமது வாழ்வில் மிகக் கவலைக்குரிய நாட்களில் இதுவும் ஒன்று என்று அந்நாட்டு பிரதமர் ஜேம்ஸ் மராபே குறிப்பிட்டார்.

இந்த கொலைகளுக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. எனினும் இந்தப் பிராந்தியத்தில் பல்வேறு கோத்திரங்களுக்கு இடையில் 20 ஆண்டுகளுக்கு மேல் மோதல்கள் நீடித்து வருகின்றன.

இந்த வன்முறைகளின் ஆரம்பத்தில் இடம்பெற்ற தாக்குதல்களில் ஏழு பேர் கொல்லப்பட்டதாக அந்த பிராந்திய அளுநகர் பிலிப் உண்டியாலு குறிப்பிட்டுள்ளார். கடந்த திங்களன்று தொலைதூர கரிடா கிராமத்தில் இடம்பெற்ற புதிய வன்முறைகளில் பெண்கள், சிறுவர்கள் உட்பட 16 பேர் கொல்லப்பட்டதாக ஏ.பி.சி செய்தி நிறுவனத்திற்கு அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதில் இரு கர்ப்பிணிப் பெண்கள் உட்பட 16 பெண்கள் மற்றும் சிறுவர்கள் வெட்டி கொல்லப்பட்டுள்ளனர். சில உடல்கள் அடையாளம் காண முடியாமல் சிதைக்கப்பட்டுள்ளன.

நான் காலையில் எழுந்து எனது சமையலறைக்கு சென்றவேளை துப்பாக்கி சத்தங்கள் கேட்டன. சில வீடுகள் எரிந்துகொண்டிருந்தன என கரிடா உப சுகாதார நிலையத்திற்கு பொறுப்பாகவுள்ள பிலிப் பிமுவா என்ற நபர் தெரிவித்துள்ளார்.

எதிரிகள் கிராமத்திற்கு வந்துவிட்டார்கள் என்பதை உணர்ந்து அங்கிருந்து தப்பியோடி மரங்களிற்குள் ஒளிந்திருந்தேன் என மேலும் தெரிவித்துள்ள அவர் நான் திரும்பி வந்து பார்த்தவேளை உடல்கள் துண்டுதுண்டாக வெட்டப்பட்ட நிலையில் காணப்பட்டன வீடுகள் எரிக்கப்பட்டிருந்தன எனவும் தெரிவித்துள்ளார்.

கொல்லப்பட்டவர்கள் அனைவரையும் எனக்கு தெரியும் அவர்கள் அனைவரும் எனது மக்கள் ஆனால் அவர்களது உடல்கள் மிக மோசமாக சிதைக்கப்பட்டுள்ளதால் அவர்களது உடல்களை எங்களால் அடையாளம் காணமுடியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவர்கள் துண்டுதுண்டாக வெட்டப்பட்டிருந்தனர் சில உடல்பாகங்களை அடையாளம் காணமுடியவில்லை, எது கை எது கால் என்பது தெரியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் உடல்களை நுளம்புவலையில் சுற்றி எடுத்தபடி அந்த கிராமத்திலிருந்து தப்பியோடி வந்துவிட்டோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸ் அதிகாரிகள் குறைவாக இருந்ததே அண்மைய வன்முறை சம்பவங்களுக்குக் காரணம் என்று பப்புவா அரசு குறிப்பிட்டுள்ளது.

பப்புவா நியுகினியில் பழங்குடியினருக்கு இடையிலான வன்முறைகள் வழக்கமானது என்பதோடு மோதல்கள் பல தசாப்தங்கள் அல்லது நூண்டுகளாக நீடிக்கின்றன.

ஆசியாவில் மிகவும் வறுமைப்பட்ட நாடுகளில் ஒன்றாக பப்புவா நியுகினியில் சுமார் 40 வீதமான மக்கள் நாளொன்று 1 டொலருக்கும் குறைவான வருமானத்துடனேயே வாழ்வதாக ஐ.நா குறிப்பிடுகிறது.

Thu, 07/11/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை