தாய்வானுக்கு 2.2 பில். டொலருக்கு ஆயுதம் விற்க அமெரிக்கா ஒப்புதல்

தாய்வானுக்கு 2.2 பில்லியன் டொலருக்கு ஆயுதங்கள் விற்க அமெரிக்க இராஜாங்க திணைக்களம் ஒப்புதல் அளித்திருப்பதாக பென்டகன் அறிவித்துள்ளது.

இதில் 108 ஆப்ராம் பீரங்கிகள், 250 ஸ்டிரிங்கர் ஏவுகணைகள் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட உபகரணங்களை விற்பதற்கே உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

எனினும் இந்த விற்பனையை நிறுத்தும்படி சீன வெளியுறவு அமைச்சு கடந்த மாதம் அமெரிக்காவை வலியுறுத்தியதோடு, “இது மிகவும் உணர்வுபூர்வமானதும் ஆபத்தானதும்” என்று எச்சரிக்கப்பட்டிருந்தது.

தாய்வான் தனது நாட்டின் ஒரு பகுதி என்று சீனா கருதுவதோடு தேவை எனில் படைப்பலத்துடன் அந்த பகுதி பிரதான நிலத்துடன் இணைக்கப்படும் என்று சீனா குறிப்பிடுகிறது. ஒன்றுபட்ட சீன கொள்கைக்கு அமெரிக்கா இணக்க வேண்டும் என்று சீன வெளியுறுவு அமைச்சின் பேச்சாளர் கெங் சுங் குறிப்பிட்டிருந்தார். இதன்படி அமெரிக்கா சீனா அல்லது தாய்வான் இரண்டில் ஒன்றையே ஏற்க வேண்டும் என்று வலியுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆயுத விற்பனை பிராந்தியத்தின் அடிப்படை சமநிலைப் போக்கை மாற்றாது என்று பென்டகனின் பாதுகாப்பு இணைப்பு நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தாய்வானுக்கு ஆயுதம் விற்கும் பிரதான நாடாக இருக்கும் அமெரிக்காவின் இந்த முடிவுக்கு தாய்வான் ஜனாதிபதி அலுவலகம் நன்றி தெரிவித்துள்ளது. அமெரிக்காவுடனான தாய்வானின் ஆழமான பாதுப்பு உறவு தொடரும் என்று ஜனாதிபதி அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

தாய்வானுடன் உத்தியோகபூர்வ இராஜதந்திர உறவுகளை கொண்டிராத அமெரிக்கா அதன் பாதுகாப்பிற்கு உதவ சட்ட ரீதியாக கடப்பாடு பெற்றுள்ளது.

தாய்வானை ஒரு சுதந்திர நாடாக 20 க்கும் குறைவான நாடுகளே ஏற்றுள்ளன.

Wed, 07/10/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை