1200 ஆண்டு பழமையான பள்ளிவாசல் கண்டுபிடிப்பு

இஸ்ரேலின் நெகேவ் பாலைவனத்தில் 1200 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட உலகின் மிக ஆரம்பகால பள்ளிவாசல் ஒன்றை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

நாடோடி அரபிகளின் நகரான ரஹத்தில் 7 அல்லது 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பள்ளிவாசல் சிதிலம் ஒன்றே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் கட்டுமான வேலை ஒன்று இடம்பெற்றுக் கொண்டிருக்கும்போதே இந்த பள்ளிவாசல் சிதிலங்கள் தோன்றியதாக இஸ்ரேலிய தொல்பொருள் அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.

இந்த பள்ளிவாசல் உலகில் மிக அரிதான கண்டுபிடிப்பு என்று இந்த அகழ்வாராய்ச்சியை மேற்கொண்ட அதிகாரிகள் விபரித்துள்ளனர்.

உள்ளுர் விவசாயிகள் இந்த பள்ளிவாசலை பயன்படுத்தியிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர். பள்ளிவாசலை ஒட்டி பல கட்டடச் சிதிலங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

செவ்வக வடிவில் மேற்புறம் திறந்ததாக அமைக்கப்பட்டிருக்கும் இந்தப் பள்ளிவாசலில் இஸ்லாத்தின் புனித நகரான மக்காவை நோக்கி தொழும் திசையை காட்டும் மிஹ்ராப்பும் அமைந்துள்ளது.

அப்போதைய பைசாந்திய மாகாணமாக இருந்து தற்போது இஸ்ரேலாக மாறியிருக்கும் பகுதியை 636 இல் அரபியர் கைப்பற்றியை அடுத்து இஸ்லாத்தின் வருகைக்குப் பின் அமைக்கப்பட்ட முதல் பள்ளிவாசல்களில் ஒன்றாக இது இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

இந்த பகுதியில் தமது ஆராய்ச்சிகளை தொடரவிருப்பதாக தொல்பொருள் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Mon, 07/22/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை