கோப்பா அமெரிக்கா கால்பந்து கிண்ணம் பிரேசில் 12 ஆவது தடவையாக சம்பியன்

ஒரு கோல் பெற்ற காப்ரியல் ஜேசுஸ் மற்றொரு கோல் பெற உதவியதோடு சிவப்பு அட்டை பெற்று வெளியேற்றப்பட்ட நிலையில் பெரு அணியை 3- -1 என்ற கோல் கணக்கில் வென்ற பிரேசில் அணி 12 ஆவது தடவையாக கோப்பா அமெரிக்கா கால்பந்து கிண்ணத்தை கைப்பற்றியது.

ரியோ டி ஜெனிரோவின் மரக்கானா அரங்கில் நடைபெற்ற கோப்பா அமெரிக்க இறுதிப் போட்டியின் 15 நிடங்களுக்குள் பிரேசிலினால் முன்னிலை பெற முடிந்தது.

அபாரமான ஆட்டத்திறனை வெளிப்படுத்திய ஜேசுஸ் எதிரணி பின்கள வீரர்களை முறியடித்து எவர்டன் சோரசிடம் பந்தை பரிமாற்ற அதனை அவர் கோலாக மாற்றினார்.

கடைசியாக 1975 ஆம் ஆண்டு கோப்பா அமெரிக்கா கிண்ணத்தை வென்ற பெரு அணி முதல் பாதி ஆட்டம் முடிவதற்கு ஒரு நிடத்திற்கு முன்னர் பதில் கோல் திருப்பியது. தியாகோ சில்வாவின் கையில் பந்துபட கிடைத்த பெனால்டியை போலோ குவர்ரேரோ கோலாக மாற்றினார்.

இந்த கோல் கோப்பா அமெரிக்காவில் பிரேசில் அணி ஆறு போட்டிகளில் விட்டுக்கொடுத்த முதல் கோல் என்றபோது அது அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தவில்லை. மத்திய கள வீரர்கள் கச்சிதமாக பந்தை பரிமாற்றியதன் மூலம் பிரேசிலினால் ஒருசில நிமிடங்களிலேயே மற்றொரு கோலை புகுத்த முடிந்தது.

சிறப்பாக பந்தை எடுத்துச் சென்ற ரொபார்டோ பிர்மினோ அதனை ஆர்துரிடம் வழங்கினார்.

பின்னர் அந்தப் பந்தை வசதியான இடத்தில் இருந்த ஜேசுஸிடம் தட்டிவிட அவர் எதிரணி கோல்காப்பாளரை முறியடித்து கோலாக மாற்றினார்.

இரண்டாவது பாதி ஆட்டம் ஆரம்பித்தபோது பெரு அணி கோல்பெறும் முனைப்பை அதிகரித்த போதும் பலம்மிக்க பிரேசில் அணிக்கு முன் அதனால் ஈடுகட்ட முடியவில்லை.

மறுபுறம் போட்டியின் 20 ஆவது நிமிடத்தில் தவறிழைத்து மஞ்சள் அட்டை பெற்றிருந்த ஜேசுஸ் 70 ஆவது நிமிடத்தில் மற்றொரு தவறை இழைத்து சவப்பு அட்டை பெற்று வெளியேற்றப்பட்டதால் பிரேசில் கடைசி நிமிடங்களை 10 வீரர்களுடனேயே ஆடியது.

அரங்கில் 70,000 ரசிகர்கள் கூடியிருந்த இந்தப் போட்டியின் கடைசி நிமிடத்தில் மாற்று வீரர் ரிச்சார்லிசன் பெனால்டி மூலம் கோல் பெற்று பிரேசில் அணிக்கு 3ஆவது கோலை பெற்றுக்கொடுத்தார்.

2007இல் கடைசியாக கோப்பா அமெரிக்க கிண்ணத்தை வென்ற பின் பிரேசில் அணி பெறும் முதலாவது பிரதான கிண்ணமாக இது உள்ளது.

மூன்று ஆண்டுகளுக்கு முன் அந்த அணியின் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்ற டிடேவுக்கும் இது முதல் பிரதான கிண்ணமாகும்.

அத்துடன் பிரேசில் அணி தனது நட்சத்திர வீரர் நெய்மார் இன்றியே இந்தக் கிண்ணத்தை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காயத்துக்கு உள்ளாகி இருக்கும் நெய்மார் இம்முறை கோப்பா அமெரிக்க கிண்ணத்தில் பங்கேற்காத நிலையில் பிரேசில் அணியின் பார்வையாளராகவே அவர் பங்கேற்று வந்தார்.

Tue, 07/09/2019 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக