12 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் செப்டெம்பர் 3ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

லக்மல் சூரியகொட

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட 12 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் உச்சநீதிமன்றத்தால் செப்டெம்பர் மாதம் 3ஆம் திகதிக்கு நேற்று ஒத்திவைக்கப்பட்டது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய மற்றும் நீதியரசர்களான புவனேக அலுவிகார, சிசிற.டி.ஆப்ரூ, பிரியந்த ஜயவர்த்தன, பிரசன்ன ஜயவர்த்தன, எல்.ரி.பி.தெஹிதெனிய மற்றும் முர்து பெர்னான்டோ ஆகிய எழுவர் அடங்கிய குழு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது மேலதிக சமர்ப்பிப்புக்களுக்காக செப்டெம்பர் 3ஆம் திகதிக்கு இவ்வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா, ஜனாதிபதி சட்டத்தரணிகளான சாலிய பீரிஸ், சஞ்சீவ ஜயவர்த்தன, சட்டத்தரணி லக்‌ஷான் டயஸ் ஆகியோர் பல்வேறு மனுதாரர்கள் மீது ஆஜராகி வாய்மூல சமர்ப்பித்தல்களை முன்வைத்தனர். செப்டெம்பர் 3ஆம் திகதி வழக்கு மேலதிக விசாரணைக்கு எடுக்கப்படும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரிப்பதற்கு ஏழு நீதியரசர்கள் கொண்ட குழுவை பிரதம நீதியரசர் அறிவித்திருந்தார். சட்டமா அதிபர், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் மேலும் பலர் ஏழு நீதியரசர்கள் கொண்ட குழு முன்னிலையில் இந்த மனுக்கள் விசாரிக்கப்பட வேண்டும் என மனுத்தாக்கல் செய்திருந்தனர். இதனைக் கருத்தில் கொண்டே பிரதம நீதியரசர் தனது பரிந்துரையை முன்வைத்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை உட்பட 12 பேர் அடிப்படை மனித உரிமை மீறல் மனுக்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர். கொச்சிக்கடை தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த மேதா சத்சரணி சிறிமான்ன மற்றும் இமேஷ் திவங்க திரிமான்ன ஆகியோரின் தந்தை தாக்கல் செய்திருந்த மனுவில், பொலிஸ்மா அதிபர் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோரை குற்றவியல் சட்டக்கோவையின் கீழ் தண்டிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.

குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட மேதா சத்சரணி சிறிமான்ன களனி பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பட்ட மாணவி என்றும், இமேஷ் 2019ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ளதாகவும், இவர்கள் தமது பரீட்சைகளுக்கு ஆசீர்வாதம் பெறும் நோக்கிலேயே கொச்சிக்கடை அத்தோனியார் தேவாலயத்துக்குச் சென்றிருந்ததாக மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார். இவர்கள் இருவரும் பௌத்தர்களாக இருக்கின்றபோதும் பரீட்சையை முன்னிட்டே ஆசீர்வாதம் பெற தேவாலயத்துக்குச் சென்றிருப்பதாக அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tue, 07/30/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை