ஐ.தே.க ஜனாதிபதி வேட்பாளர் யார்? ஓகஸ்ட். 05 இல் தெரியும்

ஓகஸ்ட் 05 ஆம் திகதிக்குப் பின்னரே ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை கட்சி அறிவிக்குமென கட்சியின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர் மரிக்கார் நேற்று தெரிவித்தார்.

ஐ.தே.கவின் ஜனநாயக கூட்டணி அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டதன் பின்னர் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் செயற்குழுவுடன்கூடி ஜனாதிபதி வேட்பாளரை தீர்மானிப்பரென்றும் அவர் கூறினார்.

அலரி மாளிகையில் நேற்றுக் காலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மரிக்கார் எம்.பி இவ்வாறு தெரிவித்தார்.

" ஐ.தே.க வின் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு ஜனநாயக முறையில் இடம்பெறுமே தவிர ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் போன்று சாப்பாட்டு மேசையிலிருந்தபடி முன்னெடுக்கப்படமாட்டாது." என்றும் அவர் விளக்கமளித்தார்.

ஐ.தே.கவின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் யாரென ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே மரிக்கார் எம்.பி இவ்வாறு தெரிவித்தார்.

கட்சி யாப்புக்கமைய பாராளுமன்ற உறுப்பினர்களும் செயற்குழு உறுப்பினர்களும் இணைந்தே ஜனாதிபதி வேட்பாளரை நியமிக்க வேண்டும். அதனால் அவ்விடயம் தொடர்பில் இன்னும் இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை. ஓகஸ்ட் 05 ஆம் திகதிக்குப் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறினார். மேலும் இந்த அரசாங்கம் எதிர்வரும் 30,31 மற்றும் 01 ஆம் திகதிகளில் வழங்கப்படவுள்ள அரசாங்க நியமனங்களில் எவ்வித கட்சி பேதமும் இன்றி பட்டதாரிகள் தெரிவுசெய்யப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். 2013 தொடக்கம் 2018 வரையான காலப்பகுதிக்குள் பட்டப்படிப்பை முடித்துக் கொண்ட பட்டதாரிகள் 12 ஆயிரம் பேருக்கே ஒரே தடவையில் அரசாங்க நியமனம் வழங்கப்படவுள்ளது.

லக்ஷ்மி பரசுராமன்

Wed, 07/24/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை