முன்னாள் பொலிஸ் மாஅதிபர் மீது ஊழல் குற்றச்சாட்டு; 03 வருட சிறை

முன்னாள் பிரதி பொலிஸ் மாஅதிபர் ஹெக்டர் தர்மசிறி, ஆறு ஊழல் குற்றச்சாட்டுக்களின் பேரில் மூன்று வருட சிறைத்தண்டனைக்கு ஆளாகியுள்ளார். கொழும்பு பிரதான மாஜிஸ்திரேட் லங்கா ஜயரட்ன நேற்று அவருக்கு இந்த சிறைத் தண்டனையை வழங்கினார்.

அத்துடன் முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபருக்கு மேற்படி ஊழல் குற்றச்சாட்டு ஒவ்வொன்றுக்கும் 50 ஆயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது. பின்னர் அவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

இலஞ்ச ஆணைக்குழு அவர் மீது 15 ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தியிருந்தது. எனினும் 6 குற்றச்சாட்டுகளில் மட்டுமே அவரை நீதிபதி குற்றவாளியாகத் தீர்ப்பளித்ததுடன் ஏனைய 9 குற்றச்சாட்டுகளிலிருந்தும் அவரை விடுதலை செய்தார்.

முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் மீது சுமத்தப்பட்ட ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் ஒருவருட சிறைத்தண்டனை என்ற ரீதியில் மொத்தமான 6 வருட சிறைத்தண்டனையை மூன்று வருடங்களில் நிறைவுபடுத்த வேண்டுமென நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார்.

2007 ஆம் வருடம் மாத்தளை பிரிவில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக இருந்தபோது சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களை மினுவாங்கொடையில் உள்ள தனது வீட்டில் தனிப்பட்ட வேலைகளுக்குப் அமர்த்திக்கொண்டதாக முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது. அவருக்கு வழங்கப்பட்ட தண்டனை ஏனைய அரசாங்க அதிகாரிகளுக்கு ஒரு படிப்பினையாக அமைய வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பு வழங்கிய போது குறிப்பிட்டார்.

Wed, 07/03/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை