தேர்தலில் என்னை தோற்கடிக்க ஸஹ்ரான் மும்முரமாக செயற்பட்டார்

 அச்சத்திலிருந்த மக்களை அமைதிப்படுத்தவே உலகில் முஸ்லிம்கள் பெரும்பான்மை என்றேன்

காத்தான்குடியிலுள்ள எந்த ஒரு அரசியல் கட்சியும் ஸஹ்ரானுடைய பயங்கரவாத செயற்பாடுகளுக்கு உதவி வழங்கவில்லை. 2017 மார்ச் மாதத்தின் பின்னர் ஸஹ்ரானினதோ அவரது சகாக்களினதோ எந்த ஒரு செயற்பாடும் காத்தான்குடியில் இடம்பெறவில்லை என முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார்.

பொதுத் தேர்தலுக்காக ஸஹ்ரானுடன் ஒப்பந்தம் செய்தாலும் அவர் அதனை முறித்து என்னை தோற்கடிக்க செயற்பட்டார். அவர் இறந்த செய்தி கேட்டு உலகில் சந்தோசப்பட்ட முதல் நபர் நான் தான். அவர் ஒரு பயங்கரவாதி எனவும் அவர் கூறினார்.

21 ஆம் திகதி பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தும் பாராளுமன்ற தெரிவுக்குழு முன்பாக நேற்று சாட்சியமளித்த ​போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அச் சத்திலிருந்த எமது மக்களை அமைதிப்படுத்துவதற்காகவே இலங்கையில் முஸ்லிம்கள் சிறுபான்மை என்றபோதும் உலகில் பெரும்பான்மை என்று கூறினேன். இதில் வேறு நோக்கம் எதுவும் கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

தெரிவுக்குழு பிரதி சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற குழு அறையில் நேற்று மாலை கூடியது.குழு உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விளுக்குப் பதிலளித்த அவர்,

ஸஹ்ரானின் குழுவின் அடாவடிச் செயற்பாடுகளுக்கு எதிராக பல தடவை பொலிஸில் முறையிட்டிருக்கிறோம். அவருடன் இருக்கும் சிலருக்கு இராணுவ தொடர்பு இருந்தது. 2017 வரை அவர் மதம் சார்ந்த விடயங்களை தான் போதித்தார்.அவர் சிறந்த பேச்சாளர். பயங்கரவாத தொடர்புகள் இருக்கவில்லை. 2017 இல் அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்ட பின்னர் தலைமறைவாகியிருந்தார்.தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு பின்னரே அவர் பயங்கரவாதி என அறிந்தேன்.அது வரை அவர் பயங்கரவாத தொடர்புள்ளவரென தெரிந்திருக்கவில்லை. பயங்கரவாதியாக தெரியாது.தெரிந்திருந்தால் முறையிட்டிருப்பேன்.

2015 காலப்பகுதியில் பயங்கரவாதி அல்ல.பின்னரே பயங்கரவாதியாக ஐ.எஸ்ஸில் இணைந்து செயற்பட்டுள்ளார்.மத குழுத் தலைவராக அன்று இருந்தார்.தேசிய தௌஹீத் ஜமாஅத் என அமைப்பை ஆரம்பித்திருந்தார். 2015 பொது தேர்தலின் போது அவர் சில நிபந்தனைகள் முன்வைத்தார்கள். நாமும் அதில் ஒப்பமிட்டோம். வாக்கு பெறுவதற்காக சென்றோம். ஆனால் தேர்தல் பிரசாரத்தில் பாடல் ஒலிபரப்பியதால் ஒப்பந்தத்தை இரத்து செய்து எனக்கு எதிராக செயற்பட்டு என்னை தோற்கடித்தார். அடுத்த பொதுத் தேர்தலில் எனக்கு எதிர்க்கட்சி கிடையாது.

என்னை தேசிய பட்டியலில் நியமித்ததற்கு எதிராக ஊர்வலம் சென்றார்.என்னை நீக்க வேண்டும் என்று கோரினார்.

2017 இல் எனது ஆதரவாளர்களான சூபிகளை தாக்கினார்.நான் அதற்கு எதிராக முறையிட்டேன். 9 பேர் கைது செய்யப்பட்டார்கள். நியாஸ் என்பவர் எனக்கு எதிராக முகநூலில் எழுதி வந்தார். இவர் தற்கொலை குண்டுதாரியாகும்.

இவர் பல தௌஹீத் அமைப்புகளிலிருந்து முரண்பட்டு நீக்கப்பட்டவர்.அவர் சகல குழுக்களையும் விமர்சிப்பார். காத்தான்குடி உலமா சபை, பள்ளிவாசல் சம்மேளம் என எதற்கும் அவர் கட்டுப்படவில்லை. அவர் பயங்கரவாதியாக மாறுவார் என நம்பவில்லை. செய்தியை பார்த்தே அறிந்தேன்.

தற்கொலை தாக்குதலின் பின்னரே அவர் ஏனைய மதங்களுக்கு எதிராக ஆற்றிய உரைகளை பார்த்தேன். அவரை 2015 தேர்தலுக்கு பின்னர் சந்திக்கவில்லை என்றும் கூறினார்.

 

ஷம்ஸ் பாஹிம், சுப்ரமணியம் நிசாந்தன்

 

Fri, 06/14/2019 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக