திருக்கோவில் மண்டானை கிராம மக்கள் குடிநீரின்றி அவதி

கால்நடைகள், உணவு, நீரின்றி அலைவு

திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மண்டானைக் கிராமத்தில் வசித்து வரும் மக்கள் குடிநீர் வசதியின்றி பல்வேறுபட்ட இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருவதாக பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட தம்பிலுவில், திருக்கோவில், தம்பட்டை, விநாயகபுரம் போன்ற பகுதிகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட மக்களை ஒன்றிணைத்து கடந்த 2006 ஆம் ஆண்டு காலப் பகுதியில் உருவாக்கப்பட்ட மீள்குடியேற்றக் கிராமம்தான் மண்டானைக் கிராமம் ஆகும்.

இக்கிராமத்தில் சுமார் 400 குடும்பங்களைச் சேர்ந்த 1400 மக்கள் தொகையினர் இங்கு வாழ்ந்து வருகின்றனர். இப்பிரதேசத்தில் மீள் குடியமர்த்தப்பட்ட மக்கள் அடிப்படை வசதிகள் பலவற்றைப் பெற்றுக் கொள்வதில் பாரிய சிக்கல்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அம்பாறை மாவட்டத்தில் வரட்சியுடனான காலநிலை நிலவி வரும் இக்காலப் பகுதியில் இக்கிராமத்தில் உள்ள நீரேந்து பிரதேசங்கள் வற்றி வரண்டு காணப்படுகின்றன. கிணறுகள், கால்வாய்கள் மற்றும் குளங்கள் போன்றவற்றின் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து குடிநீரைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் அப்பகுதி மக்கள் உள்ளனர். நீர்த் தட்டுப்பாடு காரணமாக இங்குள்ள மக்களில் பெருந் தொகையானோர் தூரப் பிரதேசத்தில் உள்ள தமது உறவினர்களின் இல்லங்களில் தஞ்சமடைந்தும் வாழ்ந்து வருகின்றனர்.

இப் பிரதேச மக்களின் குடிநீர்த் தட்டுப்பாட்டினை தற்காலிகமாக நிவர்த்தி செய்யும் பொருட்டு திருக்கோவில் பிரதேச சபை, திருக்கோவில் பிரதேச செயலகம் ஆகியவற்றால் நீர்க் கொள்கலன்கள் மூலம் வாரத்திற்கு இரண்டொரு தடவைகள் நீர் கொண்டு செல்லப்பட்டு அம்மக்களுக்காக வழங்கப்பட்டு வருகின்றன. நீர்த் தட்டுப்பாட்டினை பல தரப்பினரிடம் முறையிட்டும் தமக்கு நிரந்தரத் தீர்வேதும் கிட்டாத காரணத்தினால் இப்பகுதியில் உள்ள மக்கள் தமது நிலங்களில் கிணறுகளை வெட்டி நீரைப் பெற்றுக் கொள்ளலாம் என்ற நப்பாசையுடன் கிணறு தோண்டுகின்றபோது, கிணறு தோண்டி பூதம் வெளியான கதைபோல் பல அடி ஆழத்திற்கப்பால் தோண்டிக் கொண்டு செல்கின்றபோது நீர் வெளிவருவதற்குப் பதிலாக பாரிய கல் மலைகள் வெளியாவது கண்டு இம்மக்கள் மிகுந்த கவலையடைந்துள்ளனர்.

அட்டாளைச்சேனை தினகரன் நிருபர்

Mon, 06/10/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை